நாடாளுமன்றில் இருவருக்கு எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே மற்றும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையூறு விளைவித்தமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகேவுக்கு பிரதி சபாநாயகர் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு இரண்டு முறை பிரதி சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சபையில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரை குறிப்பிடாமல் உரையாற்றுமாறு பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரை பிரயோகித்த போது அது சபையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் என தெரிவித்து பிரதி சபாநாயகர் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
எச்சரிக்கையை மீறி உரையாற்றும் போது இரண்டாவது தடவையாக எச்சரிக்கை விடுத்த பிரதி சபாநாயகர் மூன்றாவது தடவையாக எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு செயற்பட வேண்டாம் என பிரதி அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவரை சபையிலிருந்து வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
