விடுவிக்கப்பட்டும் காணிகளைத் தேடியலையும் வலி.வடக்கு மக்கள்!
வலிகாமம் வடக்கில் 25 வருட இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்த ஒரு சில வீடுகளைத் தவிர பொதுமக்களின் ஏனைய அனைத்து விடுகளும் இடித்து அழிக்கப்பட்டு தரைமட்ட மாக்கப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி பலாலிப் பகுதியில் ஜே.252, 253,254 கிராம சேவகர் பிரிவின் கீழ் உள்ள காணிகள் பகுதி அளவில் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும் பகுதி விவசாய நிலங்களாகவே உள்ளன. மக்கள் குடியிருப்பு பிரதேசங்கள் மிகக் குறைந்தளவே விடப்பட்;டன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட குறைந்த குடியிருப்புப் பிரதேசங்களிலும் இருந்த பெருமளவான வீடுகள் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 30 வீடுகள் இருந்த அன்ரனி குடியிருப்பில் ஒரு வீட்டினைக்கூட இராணுவத்தினர் விட்டுவைக்கவில்லை. அனைத்து வீடுகளும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், பற்றைக் காடாக இருக்கும் அப்பகுதியில் மக்கள் தமது காணிகளை இனங்கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் தமது பணத்தினை செலவிட்டு காணிகளை துப்புரவு செய்து வருகின்றார்கள். இதற்கான செலவினை பிரதேச செயலகம் வழங்கும் என்று உறுதியளித்த பின்பே தமது பணத்தினை செலவு செய்து பற்றைக் காடுகளை அகற்றும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
