Sunday, 24 January 2016

சில பாடசாலை அதிபர்கள் தவறான ஒழுக்கம் மற்றும் சமூக விரோத நடத்தைகள் என்பனவற்றின் முன்னணி நடிகர்களாக உள்ளார்கள், அரச உரிமைகள் காரணமாக இலஞ்சம் மற்றும் ஊழல் என்பனவற்றில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்
-     கலாநிதி. ரங்க கலன்சூரிய
பாடசாலை அதிபர்களுக்கு எதிராக பணத்தை இலஞ்சமாக பெறுகிறார்கள் என எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் சகலரும் அறிந்ததே. அதேபோல அவர்கள் பாலியல் இலஞ்சம் கோரியதாக சில வழக்குகளும் உள்ளன.
corruption
ஒரு சராசரி அரசாங்க ஊழியர்கூட ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றலுக்கு உள்ளாகிறார். அப்படியானால் ஒரு பாடசாலை அதிபர் தொடர்ச்சியாக 13 வருடங்கள் ஒரே வேலைத் தலத்தில் எப்படி நீடித்திருக்க முடிகிறது?
இது கடந்;த வாரம் வெளிச்;சத்துக்கு வந்த நாட்டிலுள்ள மூன்று முன்னணிப் பாடசாலைகளின் உயர்தர அதிபர்களைப் பற்றிய சுவராஸ்யமான கதைகளை ஆய்வு செய்யும் ஒருவருடைய மனதில் வெளிப்படையாக எழும் கேள்வி. மேலே குறிப்பிட்ட இந்த முக்கியமான கேள்வி மற்றவர்கள் மத்தியில் குறிப்பாக கொழும்பு றோயல் கல்லூரியின் முன்னாள் அதிபரையே குறிப்பாகச் சம்பந்தப் படுத்தியுள்ளது.
வார இறுதிப் பத்திரிகைகள், ஒரு காலத்தில் மிகவும் புனிதமான தொழிலாகக் கருதப்பட்ட இந்த தொழிற் பதவிகளை வகித்துவரும் அங்கத்தவர்களின் மாபியா பாணியிலான செயற்பாடுகள் பற்றிய விரிவான கதைகளைப் பிரசுரித்திருந்தன. நான் இதனைச் சொல்வதற்கான முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த தொழிலின் கடந்தகால மகிமை அதனை செயற்படுத்தும் பலராலும் தொடர்ந்து களங்கப் படுத்தப்பட்டு வருகின்றமையே. இலஞ்சத்தை பணமாகப் பெற்ற சம்பவங்கள் நாம் நன்கறிந்ததே, ஆனால் இப்போது நாம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்ட பல வழக்குகளைப் பற்றியும் கூடக் கேள்விப்படுகிறோம். பாடசாலை அனுமதிதான் மிகவும் மோசமான மாபியாச் செயற்பாடு, அதில் பாடசாலை அதிபர்கள் அதிர்ச்சிதரும் சலுகைகளைக் கோருகிறார்கள், போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பெற்றோர் ஏமாற்றுகிறார்கள் மற்றும் அப்பாவியான பிள்ளை நேர்காணல்களை சந்திக்கும்போது அவனுக்கோ அல்லது அவளுக்கோ போதிக்கப்பட்டதின்படி பொய்களைச் சொல்லவேண்டியும் உள்ளது. இந்த வகையில்தான் ஒரு பிள்ளை எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பிக்க வேண்டி உள்ளது. என்ன ஒரு அவமானம்!
கல்வி முறை இத்தகைய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது என்றால், எங்கள் சமூகத்தை நாங்கள் எதை நோக்கி வழி நடத்துகிறோம்? பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இத்தகைய ஊழலுக்கு உட்பட்டிருந்தால், எப்படி எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் நல்லொழுக்கம் மற்றும் நெறிமுறைகளைப் போதிக்க முடியும்?
“சமீபத்தில் சில அதிபர்கள் மாணவர்கள் எங்களை வணங்கும் பழக்கம் இனிமேல் இருக்கப் போவதில்லை என முறையிட ஆரம்பித்துள்ளார்கள். நிச்சயமாக, மாணவர்கள், அவர்களுடைய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் உள்ள ஊழல்களைப் பற்றி அறிய நேரும்போது இது எப்படி நடக்கும். தான் எப்படி இந்தப் பாடசாலைக்கு வந்தேன் என்பது அவன் அல்லது அவளுக்கு நன்கு தெரியும், ஆகவே அதிபர்கள் ஒரு புனிதமான கதாபாத்திரம் அல்ல, ஆனால் ஒரு மாபியா வியாபாரி” இவ்வாறு சொன்னார் கொழும்பு பாடசாலையில் பணிபுரியும் ஒரு ஆசிரியர்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இத்தகைய விஷயங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கவிருக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் வரவேற்கத் தக்கவை. ஆனால் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் (சி.ரி.யு) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பதன்படி, ஊழல் புரிந்த அதிபர்கள் பற்றிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவர்கள் பணியில் தொடர்வதை தடை செய்திருக்க வேண்டும். “திரு.குணசேகராவைப் போன்றவர்கள் விசாரணைகள் நிலவையில் உள்ளபோது கல்வி அமைச்சின் உயர் பதவிக்கு ஏன் மாற்றப் பட்டார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் இத்தகைய ஒரு உயர் பதவியை வகிக்கும்போது நிச்சயமாக அவரால் விசாரணைகளில் தனது செல்வாக்கினைச் செலுத்த முடியும்” என ஸ்டாலின் தெரிவித்தார். நிச்சயமாக இது பெறுதியுள்ள ஒரு வாதம், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவையாக இருக்குமானால் பணித் தடை அல்லது கட்டாய விடுமுறையை எதிர்கொள்ளாமால் எப்படி அவரால் தனது சேவையை தொடர முடிந்தது?
இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பதின்படி, முன்னாள் றோயல் கல்லூரி அதிபருக்கு எதிரான முறைப்பாடுகள் நீண்ட காலத்துக்கு முன்பே 2010ம் ஆண்டில் குவியத் தொடங்கின. அதே பாடசாலையில் பணிபுரியும் ஒரு ஆசிரியர் குழுவினால் புகார்கள் தொடர்ந்து முன்வைக்கப் பட்டன. பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஒரு விரிவான விசாரணையையும் ஆரம்பித்தது, ஆனால் அதன் இறுதி விளைவு தங்கள் அதிபருக்கு எதிராக புகார்களை முன்வைத்த மூன்று ஆசிரியர்கள் திடீர் இடமாற்றலுக்கு உள்ளானதுதான். குற்றம் சாட்டப்பட்டவர் அதே பதவியில் இன்னும் அதிக அதிகாரங்களுடன் நீடிக்கலானார், ஆனால் புகார் தெரிவித்தவர்கள் தண்டிக்கப் பட்டார், என அந்தப் பாடசாலையில் பணியாற்றும் உத்தியோகக்குழு அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார். “அதனால் அதிபருக்கு எதிராக மேலும் புகார்கள் தெரிவிக்கப் படவில்லை. நாங்கள் எங்கள் வாய்களை மூடிக்கொள்வது என தீர்மானித்தோம்” என ஒரு ஆசிரியர் தெரிவித்தார். பொதுச் சேவைக் குழுவின் விசாரணையும் கூட கைவிடப்பட்டது அல்லது வேறு வழிக்கு மாற்றப்பட்டது.
“2013 ல் இலஞ்ச ஆணைக்குழு திரு.குணசேகராவுக்கு எதிராக மற்றொரு விசாரணையை ஆரம்பித்தது. இந்த முன்னேற்றங்களுடன் முன்னாள் ஆளும் குடும்பத்தின் அங்கத்தவர்கள் கல்லூரி நிகழ்வுகளில் அடிக்கடி கலந்து கொள்வதை நாங்கள் கண்டோம்” என மற்றொரு ஆசிரியர் தெரிவித்தார். விசாரணை இருந்தபோதிலும் அவர் அரச குடும்பத்துடன் நெருக்கமாகிக் கொண்டிருந்தார். “உண்மையில் கல்வி அமைச்சின் சத்துணவுத் துறையின் எதுவித அறிவும் இன்றி நிகழ்த்தப்பட்ட ‘கஞ்சித் திட்டம்’ போன்ற அப்படியான பல சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகள் அரங்கேறின” என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். எனினும் இலஞ்ச விசாரணை மழுங்கத் தொடங்கிற்று மற்றும் முந்தைய ஆட்சியின்போது ஆணைக்குழுவே அதைச் செய்தது.
“ஊழல் அதிபர்களுக்கு எதிராக எங்கள் தொடர்ச்சியான போராட்டம் ஒருபோதும் நிறுத்தப் படவில்லை” என ஸ்டாலின் சொன்னார். “பல சந்தர்ப்பங்களில் அந்த அதிபர்களுக்கு எதிராக கணக்காய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர், ஆனால் சில நாட்களுக்குள்ளேயே அந்த கணக்காய்வாளர்களின் பிள்ளைகள் அந்தக் கல்லூரிக்குள் நுழைவதற்கான வழிகளைப் பெற்றுக் கொண்டார்கள் மற்றும் சுத்தமான கணக்காய்வு அறிக்கைகள் வெளிப்பட்டன” என அவர் குற்றம் சாட்டினார்.
கடந்த வருடம் ஜனவரி 08ல் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள், கல்வி அமைச்சு ஒரு உத்தியோக பூர்வ அறிக்கையில் 10 தவறுகள் மற்றும் ஊழல்கள் புரிந்த அதிபர்களின் பெயர்களை வெளியிட்டது. ஆனால் சுவராஸ்யமான முறையில் கடந்தவாரம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட அந்த உயர் வர்க்க அதிபர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கவில்லை. அமைச்சு வட்டாரங்கள் தெரிவிப்பதின்படி, இந்த மூன்று அதிபர்களில் ஒருவர் தனது அளவுக்கதிகமான அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமைச்சு மற்றும் அதிபர்களுக்கு இடையில் ஒரு பேச்சு வார்த்தையை இடைத் தரகராக ஏற்பாடு செய்ய முயற்சித்தாராம். எனினும் அமைச்சு நெகிழ்வு காட்டாததால் விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாக ஒரு அதிகாரி தெரிவித்தார். ஆனால் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு ஏன் இவ்வளவு கால தாமதம்.
உண்மையில் எங்கள் சகோதரப் பத்திரிகையான சண்டே ரைம்ஸ், பழைய மாணவர் சங்கங்கள் ஊழல் அதிபர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்று பிரச்சினையின் அந்தப் பகுதியைப் பற்றி மிகச் சரியாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. உண்மையான நிலைப்படி பழைய மாணவர் சங்கங்கள்  இந்த முறையை கண்காணிப்பவர்களாக இருக்கவேண்டும், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த தனிப்பட்ட நலன்களுக்காக பிரதானமாக முற்றிலும் எதிர்மாறாக மாறிவிட்டார்கள். மிகவும் ஆச்சரியமான முறையில் சில சந்தர்ப்பங்களில் இந்த பழைய மாணவர் சங்கங்கள் தவறு செய்தவர்களாக பெயரிடப்பட்டுள்ள இந்த அதிபர்களை எந்த விலை கொடுத்தாவது காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது – செய்தியாளர் மாநாடுகளை நடத்தியும் கூட.
பாடசாலை தலைவரின் நடத்தை அப்படி இருக்குமானால், ஆசிரியர்களைப் போன்ற மற்றவர்களின் செயல்களை விவரிக்க வேண்டிய அவசியம் இல்ல. இங்கு நாங்கள் மாநகரசபை தொழிலாளர்களைப் பற்றி விவாதிக்கவில்லை, ஆனால் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்து வார்ப்புச் செய்யும் பொறுப்புள்ள புனிதமானதும் மற்றும் மதிப்புக்குரியதுமான ஒரு தொழில் பற்றியே பேசுகிறோம்.
என்னுடைய மனதுக்கு தோன்றுவது இத்தகைய துயரமான வளர்ச்சி முக்கியமாக கல்வி போன்ற துறைகளில் எற்பட்டிருப்பது கடந்த 10 வருட காலமாக நடைபெற் நல்லாட்சியின் தோல்வியினால் ஏற்பட்ட உப விளைவாகும். ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம், சட்டத்தின் ஆட்சி இல்லாமை போன்றவைதான் ஒரு தசாப்தத்துக்கு மேலாக நடைபெற்ற ஆட்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தன. இதன்படி இந்த அம்சங்கள் பாடசாலைகளுக்குள்ளும் ஊடுருவி இருந்தன, அங்கு ஊழல் நிறைந்த நபர்கள்  அந்த தொழிலுக்குரிய நல்லொழுக்கங்களையும் மற்றும் நெறிமுறைகளையும் அலட்சியம் செய்து தாங்கள் விரும்பியபடி பாடசாலைகளை நடத்தினார்கள். இப்படிச் சொல்வதினால் அதிபர்களும் மற்றும் ஆசிரியர்களும் ராஜபக்ஸவின் ஆட்சிக்கு முன்னர் ஊழல் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை – ஆனால் பெரும்பாலும் இந்த அளவுக்கு இல்லை. முந்தைய ஆட்சி ஒரு பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மற்றும் அரச குடும்பத்துடனான நெருக்கத்தை இந்த ஊழல் பாடசாலைத் தலைவர்கள் ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வந்தார்கள்.

யகபாலனய (நல்லாட்சி) என்பது அரசியல் ரீதியாக மட்டுமே நல்ல ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதல்ல. எங்களது கல்வி முறை சுத்தமாக்கப்பட்டு அந்த தவறான அரசியல்வாதிகளிடம் இருந்து அதைப் பாதுகாக்காமல் விட்டால் ஒரு சுத்தமான சமூகத்தை பற்றி எங்களால் கற்பனை கூடச் செய்ய முடியாது. அதன்படி இலஞ்ச ஆணைக்குழு தனது வெளிச்சத்தை பாடசாலைகள் மீதும் பாய்ச்சி, ஊழல் தலைமைகள் மீது கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியதும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தலைமையேற்றுள்ள இரும்பு பெண்மணி சந்திக்க வேண்டியுள்ள மிகப் பெரிய சவால்.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Loading...