Wednesday, 20 January 2016

விமானக் கொள்வனவு குறித்து இலங்கை தீவிர ஆராய்வு

விமானக் கொள்வனவு குறித்து இலங்கை தீவிர ஆராய்வு
விமானக் கொள்வனவு குறித்து இலங்கை தீவிர ஆராய்வு
இந்தியாவின் கடும் அழுத்தம் காரணமாக பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டத்தைக் கைவிட்ட இலங்கை , தற்போது எந்த நாட்டிடமிருந்து தாக்குதல் விமானங்களைக் கொள்வனவு செய்யலாம் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.

தாக்குதல், இடைமறிப்பு, கண்காணிப்பு என பலநோக்குப் பயன்பாடுகளுக்கு உகந்த வகையிலான போர் விமானங்களை விமானப்படைக்கு கொள்வனவு செய்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்திருந்தது.

அந்தவகையில், சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் ஜே.எவ். 17 போர் விமானங்களை சலுகை அடிப்படையில் வாங்குவதற்கு கொழும்பு முடிவெடுத்திருந்தது. இதற்கு இஸ்லாமாபாத்தும் இணக்கம் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கைப் பயணத்தின்போது இதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்றும், இறுதி நேரத்தில் இந்தியா பிரயோகித்த அழுத்தங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், தற்போது ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் தாக்குதல் விமானங்கள் தொடர்பில் இலங்கை ஆராய்ந்து வருகின்றது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் திருப்திப்படுத்தும் நோக்கில் இவ்விரு நாடுகளையும் தவிர்த்து பிறிதொரு நாட்டிலேயே இலங்கை அரசு, விமானப்படைக்குத் தேவையான போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, இலங்கை விமானப்படைக்குத் தேவையான போர் விமானங்களைக் கொள்வனவு தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸிடம் வினவியபோது,

விமானப்படைக்கு புதிய விமானங்கள் தேவையாகவுள்ளது. அதனை வாங்குவதற்குரிய ஆரம்பக்கட்டப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை உண்மைதான். அந்த வகையில் எந்த நாட்டிடமிருந்து வாங்கலாம் என்பது பற்றி தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாகத்தான் பாகிஸ்தான் தயாரிப்பான ஜே.எவ். 17 விமானங்கள் பற்றியும் ஆராயப்பட்டது. ஆனால், அங்குதான் விமானங்கள் வாங்குவது என எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
Loading...