Friday, 8 January 2016

யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஒரு இலட்சம் ஈழத்தமிழ் அகதிகள் வெளிநாடுகளில்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் தொடர்ந்தும் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 50 ஆயித்து 268 பேர் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதோடு அவர்கள் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் அந்த புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 583 ஈழத்தமிழ் அகதிகள் இன்னமும் வெளிநாடுகளில் தங்கியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 15 ஆயிரத்து 504 பேர் புகலிடம் கோரி வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மிகவும் சொற்பளவான அகதிகளே நாடு திரும்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் 231 அகதிகள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளதோடு அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகால மோதலில் குறைந்தது 40 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...