Thursday, 14 January 2016

தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் புரிந்து கொள்ளக்கூடியதே

                                         - பேராசிரியர்.குமார் டேவிட்
எல்.ரீ.ரீ.ஈ யினை துடைத்தழித்து ஏழு வருடங்களாகி விட்டன, ஆனால் தமிழர்களுக்tna npcகு அவர்களின் அடிச்சுவடுகளைக் கண்டுபிடிக்க நேரம் போதவில்லை. முப்பது வருட உள்நாட்டு யுத்தம் ஒரு சலிப்பினை ஏற்படுத்தியுள்ளது, எல்.ரீ.ரீ.ஈ, மாயத் தோற்றமுள்ள ஒரு தலைவரின் உருவத்தையும் மற்றும் கற்பனையான ஈழம் என்பதனையும் அனைத்து யதார்த்தங்களில் இருந்தும் மாறுபட்ட விதமாகச் செய்யத் தூண்டியது, அதனால் யுத்தக் குற்றங்கள் மக்களின் வாழ்க்கையை கருகிப் போகச் செய்தன. சிங்கள அரசியல்வாதிகளிடம் நல்லிணக்கம் என்பது சிறுபான்மையாக இருப்பதற்கான காரணத்தை வாதிடுகிறர் ஜெகான் பெரேரா. பெரும்பான்மையான சிங்களவர்களுக்கு “எல்.ரீ.ரீ.ஈ முறியடிக்கப்பட்டு விட்டதால் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை தாழ இறக்கியுள்ளார்கள், எல்லாம் நன்றாகவே உள்ளது. அவர்கள் போரில் தோல்வியுற்றதன் பின்னர் அதிகாரப் பரவலாக்கம்!  இந்த தாராண்மைவாதிகள் மற்றும் இடதுசாரிகள் எந்த உலகில் வாழ்கிறார்கள்”.
தோல்வியின் சூழ்நிலையில், சிங்களவர்களின் அலட்சியம் மற்றும் திறனற்ற ஆட்சி, நிலவுவதால் தமிழர்களின் அரசியல் பிரபஞ்சம் கொந்தளிப்பாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே ஒரு தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் குழு என்னை வரவேற்று சில தலைப்புகளை ஆராயும்படி பரிந்துரைத்தபோது, நான் என்னுடைய அறிவார்ந்த அரசியல் சகபாடிகள் மற்றும் தோழர்களுடன் ஒரு மின்னஞ்சல் ஆலோசனையில் ஈடுபட்டேன். அந்தக் குழுவின் கவலையை விளக்கிய என்னுடைய மின்னஞ்சலின் சாராம்சம் இப்படி இருந்தது:
“உள்நாட்டு தமிழ் அரசியலில் என்ன நடக்கிறது, அது முற்றிலும் குழப்பமான ஒன்றாகவே தெரிகிறது, எல்லாரும் எல்லோருடனும் சண்டையிடுகிறார்கள்? தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) முழு உண்மையையும் தமிழர்களுக்கு தெரிவிக்கிறதா அல்லது அது எதையாவது மறைக்கிறதா? விக்னேஸ்வரனின் நோக்கம் மற்றும் மூலோபாயங்கள் என்ன? இந்த கலப்பு பொறிமுறையினால் ஏதாவது நடக்குமா? அரசாங்கத்தின் உண்மையான திட்டம் என்ன?”
இதற்காக கிடைத்த பதில் மிகவும் அதிகம், அது உடனடியானதும் அறிவார்ந்த அறிவுரைகளாகவும் இருந்தன. இந்தப் பிரச்சினை எவ்வளவு சிக்கலானது என என்னை எச்சரித்ததுடன் மற்றும் தமிழர்கள் தங்கள் இக்கட்டான நிலைக்கு தொடர்ந்து முகம் கொடுப்பதில் உள்ள கஷ்டங்களை பாராட்டவும் எனக்கு கற்றுக்கொடுத்தது. தமிழர்களுக்குச் செய்ய வேண்டிய சரியான விடயம் தெற்கில் உள்ளதைப்போல வழக்கமான ஒன்றல்ல, தெற்கில் எல்லோரும் சேர்ந்து ராஜபக்ஸ மாபியாவை தோற்கடிக்கும் முக்கியத்துவத்தை பற்றிப் பிடித்தது எங்களால் புரிந்து கொள்ளக்கூடியது மற்றும் இப்போது அதை தடுத்தும் விட்டார்கள். மீதமாக எழுதப்போகும் இந்தக் கட்டுரையில் நான் இந்தப் பதில்களை வெட்கமின்றி களவாடவுள்ளேன் ஆனால் அவைகளை தேர்வு செய்வதில் நான் பொறுப்புடன் செயல்பட்டுள்ளேன்.
வட மாகாணசபையும் மற்றும் அதன் முதலமைச்சரும் மக்களுடன் அரசியல் விளையாட்டு நடத்துகிறார்களா?
ஆரம்பத்திலிருந்தே வட மாகாணசபையின் செயற்பாடுகள் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அவரது அமைச்சர்கள் கிடைத்துள்ள அரசியல் இடைவெளிக்கு அமைய வட மாகாணசபையின் செயற்பாடுகளை மேம்படுத்தவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே உள்ள அதிகாரங்களின் கீழ் துணை நிறுவனச் சட்டங்களுடன் கைகோர்த்து ஏராளமானவற்றை செய்திருக்கலாம். அதற்குப் பதிலாக அது அரசியல் கருத்துக்களுக்கு அதிக உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் குறைவான சேவையையே வழங்கியது. வட மாகாணசபை மற்றும் அதன் முதலமைச்சர் பற்றிய கடுமையான விமர்சனம்  உபாலி குரேயுடன் பணியாற்றிய ஒரு பழைய ட்ரொஸ்க்கியவாதியான மயில்வாகனம் சூரியசேகரத்திடம் இருந்து வந்துள்ளது. அது மின்னஞ்சல் மூலமாக விநியோகிக்கப்பட்டு ‘கொழும்பு ரெலிகிராப்பில்’ பதிவேற்றம் செய்யப்பட்டது.
அந்த விமர்சனத்தில் உள்ள இரண்டு முக்கியமான விடயங்கள், (1) முதலமைச்சர் ஃ வட மாகாணசபை வேண்டுமென்றே தடையை ஏற்படுத்துபவர், மத்திய அரசாங்கம் இயலுமான வகையில் வழங்கியுள்ள வளங்களைப் பயன்படுத்தி செற்பாடுகளை முன்னெடுக்காதவர், மக்களின் கஷ்டங்களைப் பற்றி உணராதவர் மற்றும் யதார்த்த நடைமுறைகளைவிட அரசியல் இலாபம் தேடுவதில் அதிக அக்கறை காட்டுபவர். (2) முதலமைச்சர்ஃ வட மாகாணசபை மற்றும் அவர்களின் தமிழ் மக்கள் பேரவை என்பன எல்.ரீ.ரீ.ஈ காலத்து ஈழக் கருத்துக்களை திரும்பவும் கருத்தியல் ரீதியாக கொண்டுவர முயற்சிப்பவர்கள், இது தமிழர்களை மற்றொரு சோகத்துக்குள் தள்ள வழிவகுப்பதுடன் மற்றும் கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டியது. “பிரிவினைவாத சித்தாந்தம் மற்றும் வெறுமையான எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியலுக்கு திரும்ப அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்பனவற்றை அவர்களின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் காணக்கூடியதாக உள்ளது” என சூரியசேகரம் சொல்கிறார். என்னுடன் தொடர்பு கொண்ட ஏனையவர்கள் மேலும் தெரிவித்தது, முதலமைச்சர் மற்றும் வட மாகாணசபை ஆகியவை ஒதுக்கப்பட்ட நிதியை முற்றாக செலவிடவில்லை மற்றும் அது அவர்களின் தவறு. முதலமைச்சரால் ஏன் பிரமாண்டமான ஒரு அபிவிருத்தி திட்டத்துக்கு தலைமை தாங்க முடியாது? இராணுவத்தின் மீதான கவனத்தை தளர்த்தி ஏன் இன்னமும் அதிகமானவற்றை அரசாங்கத்திடம்  கோர முடியாது? வட மாகாணத்துக்கான அபிவிருத்திக்கு எங்களுக்குத் தேவையானது இதல்லவா?”.
இதற்கு ஆதாரமாக விடுக்கப்பட்ட உதாரணங்கள், (1) குறைவான எண்ணிக்கையில் இயற்றப்பட்ட சட்டங்கள் (லங்கா சம சமாஜி கட்சியின் பெரும்பான்மை பிரிவின் தோழர்கள் தாங்கள் முதலமைச்சர்ஃவட மாகாணசபைக்கு சட்டங்களை மொழி பெயாப்பதற்கு எவ்வளவோ உதவிகளைச் செய்துள்ளார்கள் என்றும் அவை வெறுமனே அலுமாரிகளுக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன எனவும் என்னிடம் தெரிவித்தார்கள்), யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு மத்திய அரசாங்கத்தால் ரூபா 25 பில்லியன் வழங்கப்பட்டது என்றும் அது முதலமைச்சர்ஃவட மாகாணசபையால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது, சுன்னாகம் மின்சார நிலைய சுற்றாடலில் எண்ணெய் மாசு கலப்பதால் நிலத்தடி நீர் நஞ்சாவதை தீர்த்து வைக்கும் திட்டத்துக்கு தi;டயேற்படுத்துவது போன்ற இன்னும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஏனைய தொடர்பாளர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளன. வட மாகாணசபை, தெற்குடனான பிணைப்புகளை மறைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் அதற்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்த மறுத்துள்ளதாக சூரியசேகரம் குற்றம்சாட்டும் அதேவேளை 80 – 90 விகிதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக மற்றவர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். மற்றொரு தொடர்பாளர் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்,”; குற்றச்சாட்டுகளை நம்புவது எனக்கு கடினமாக உள்ளது. நான்கு அமைச்சர்கள் மற்றும் வட மாகாணசபையிலுள்ள முழு ரி.என்.ஏ தரப்பு அங்கத்தவர்களும் பொறுப்பாக உள்ள வட மாகாணசபை, மக்களுக்குத் தெரியாமல் சதி முயற்சியில் ஈடுபடுவது சாத்தியமில்லை”
வரும் வாரங்களில் இந்த சர்ச்சை பெரிதாக வெடிக்கும்போது குற்றம் சாட்டப்படும் தடை முயற்சிகள் பற்றிய ஒரு உண்மையான படம் நிச்சயம் வெளிவரும், ஆனால் ஆரம்பத்தில் நான் சொன்னவைகளைப் பற்றிய ஒரு நினைவூட்டலை உட்புகுத்த விரும்புகிறேன். தமிழ் சமூகத்தில் உள்ள குழப்பங்கள் மற்றும் ஒழுங்கீனங்களை, உடல் நலக் குறைவு மற்றும் முடமாக்கப்பட்டு தசாப்தங்களாக திராணியற்ற நிலையில் உள்ள மத்திய அரசால் இப்போது களைவது எளிதான விடயமல்ல.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ)
ரி.என்.ஏ கட்சிகள் கூட்டுச் சேர்ந்த ஒரு தேர்தல் கூட்டணி. யுத்தத்துக்கு முன்பு அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், எல்.ரீ.ரீ.ஈ அதரவாளர்கள், ரெலோ, ஈபிஆர்எல்எப் என்பன அங்கம் வகித்தன. தமிழ் காங்கிரஸ் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் 2009 தேர்தலின்போது வெளியேறினார்கள். ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் 2015 தோதலில் தோல்வியுற்றார், ஆகவே இப்போது ரி.என்.ஏ கொண்டிருப்பது பிரதான பங்காளரான இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புதிய அங்கத்தவரான புளொட் என்பனவற்றை மட்டுமே. அது ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்ட ஒரு அமைப்பு அல்ல மற்றும் கொள்கைகளை உருவாக்கும் ஒரு மன்றமும் அதனிடமில்லை. தலைவர் சம்பந்தனே கொள்கைகளை உருவாக்குகிறார். அவரது விசுவாசியான அதிமேதாவி சுமந்திரன் கொள்கை அமைப்பில் பங்கு கொள்வதுடன் சர்வதேச சமூகத்துடன் தொடர்புகளையும் மேற்கொள்கிறார், பெயரளவில் இலங்கை தமிழரசுக் கட்சி தலைவரான மாவை சேனாதிராஜா இவர்களுடன் சேர்த்து பெயரிடப்படுகிறார். ரி.என்.ஏயில் கொள்கை அமைக்கும் மன்றம் இல்லாதபடியால் ( விந்தையாக இலங்கை தமிழரசுக் கட்சியும் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது) கோட்பாடற்ற நிலiயினால் அது பொறாமை மற்றும் எரிச்சலின் விளைநிலமாகி விடுகிறது. விக்னேஸ்வரன் வட மாகாணசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஆனால் வழமையான முடிவுகளை எடுப்பதிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். ரி.என்.ஏயின் செயல்பாட்டுக்கு எதிராக சவால் விடுவதற்காக அவர் ஒரு குழுவை ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணம், மற்றைய காரணம் அவர் அதிகம் ஆர்வமுள்ள ஒரு தமிழ் தேசியவாதி.
ரி.என்.ஏ தமிழ் வாக்குகளை மைத்திரிபால சேனநாயக்காவுக்கும் மற்றும் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் அணி திரட்ட உதவி செய்து அதன் மக்களுக்கு புதிய அரசாங்கம் அவாகளின் கவலைகளை தீர்த்து வைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. உலகத் தமிழர் பேரவை(ஜி.ரி.எப்) ஜனவரியில் சிறிசேனாவுக்காகப் பிரச்சாரம் செய்தது மற்றும் ஆகஸ்டில் தமிழ்வாக்குகளை ஐக்கிய தேசிய முன்னணிக்காக இழுத்துக் கொடுத்தது. இப்போது சில தமிழர்கள் சொல்வது ரி.என்.ஏ, ஜி.ரி.எப் , சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தங்கள் ஆதரவை இந்த நிருவாகத்துக்கு வழங்கி வெற்றி பெற வைத்தார்கள் மற்றும் இந்த ஆட்சி பொதுவாக தமிழர்களின் கவலைகளை தீர்க்கத் தவறினாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ மிகவும் துரதிருஸ்டவசமாக இந்த இரண்டு பிரமுகர்களும் மரண தண்டனை நிறைவேற்றுபவர்களின் துப்பாக்கிகளுக்கு முதல் வரிசையில் முகம் கொடுத்தபடி நிற்கவேண்டி ஏற்படும் என்று. தோதலில் தோல்வியடைந்த எதிராளிகள் அவர்களை புதைக்கும் நோக்குடன் ஒன்று சேர்ந்துள்ளார்கள். ரணில்ஃமைத்திரி  ஆட்சியில் தோல்வியுற்றால், அவர்கள் பேரினவாதத்துடன் மோதுவதற்கும் மற்றும் தமிழர்களுக்கு அற்பமானதைக் கூட வழங்குவதற்கு அவர்கள் விரும்பினாலும்கூட அதற்கான அதிகாரம் அற்றவர்களாகவே அவர்கள் கருதப்படுவார்கள் இது நியாயமற்ற சில சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த அரசாங்கம் தோல்வியுற்றால் ஸ்ரீலங்கா பல ஆண்டுகள் பினனோக்கித் தள்ளப்படும் அதேவேளை தமிழர்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும். வருங்காலத்தில் இந்த அரசாங்கம் வீழ்ந்து போகுமானால் ஸ்ரீலங்கா அனைத்து முனைகளிலும் குழப்பம் மற்றும் அடக்கு முறைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். எங்கள் சிறந்த பந்தயம் இந்த அரசாங்கத்தின்மீது நம்பிக்கை வைப்பதுதான். ரி.என்.ஏயின் சிறந்த விமர்சகரான ஒரு தமிழ் தோழர் சொன்னது: “முரண்பாடுகளுக்கு அப்பால் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது, 1948 இலிருந்து முதல் முறையாக மூத்த தேசியத் தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், நல்லிணக்கத் தலைவர் சந்திரிகா மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள ஆகியோர் ஒற்றுமையுடன் முழக்கமிடுவது தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காணவேண்டும் என்பதையே. குறிப்பிடத்தக்கபடி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் மற்றும் சர்வசன வக்கெடுப்பில் ஒரு சாதாரண பெரும்பான்மையையும் அணி திரட்டக்கூடிய நிலையிலும் அவர்கள் உள்ளனர். போரில் தோல்வியடைந்திருக்கும் தமிழர்கள் வெறுமே இந்த வாய்ப்பை அலட்சியம் செய்துவிட முடியாது”.
அடுத்த கட்டம்
சம்பந்தன் - சுமந்திரன் - சேனாதிராஜா தலைமையினால் 2016ல் சமரசமான ஒரு இடைத்தரகு நிலையை வழங்க இயலாமல் இருக்குமோ என்கிற அச்சத்துக்குப் பதிலாக தமிழ் மக்கள் பேரவை முளைவிட்டிருக்கிறது, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அழுத்தங்கள் இருப்பதை மறந்துவிடலாகாது. சிங்கள அரசாங்கங்களின் வெற்றிகரமான துரோகத்தனங்கள் (பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம், செயலற்றதாக்கப்பட்ட 13வது திருத்தம்) என்பன இந்த அச்சம் புரியக்கூடியதும் மற்றும் நியாயமானதும் என விளக்குகிறது. நீடித்த அரசியல் தீர்வில் (போலியான 13வது திருத்தத்திலும் குறைவானதை போலில்லாத) ஆர்வம் உள்ள தமிழ் கல்விமான்கள் மற்றும் தோழர்கள் அல்லாத குழுவினரான பல்வேறு பிரிவினருடனும் நான் தொடர்புகளை மெற்கொண்டேன், ஆனால் மேலே கூறப்பட்ட காரணங்களால் அரசாங்கம் அரசியலமைப்பு தொடர்பான வரைவு தீர்மானங்களை காண்பிக்காதவரை தாங்கள் தமிழ் மக்கள் பேரவையை கண்டிக்கத் தயாரில்லை என அவர்கள் தெரிவித்தார்கள்.
ஒரு நல்ல காரணத்துக்காக தமிழர் போராட்டத்துக்கு ஒரு சுதந்திரமான குரல் தேவையாக உள்ளது மற்றும் ரி.என்.ஏ அரசாங்கத்துக்கு நெருக்கமாக உள்ளதால் தமிழ் மக்கள் பேரவை செயற்படுவதற்கு ஆக்கபூர்வமான ஒரு பங்கு உள்ளது. இன்னும் பேச்சு வார்த்தை மூலோபாயங்களுக்கு ஆதரவாக தமிழர்களுக்கு ஒரு சுதந்திரமான ஒரு சக்தி முக்கியம்,  இதில்தான் விக்னேஸ்வரன் கெடுதல் செய்பவராக இல்லாமல் சாதகமான ஒரு சக்தியாக இயங்க முடியும். தமிழ் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுகள் குறைவாக உள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம், தற்போதைய உறுதியற்ற தன்மைகளைப் பாராட்ட ஒரு மூலோபாயத்தை கண்டுபிடிக்கவும் வேண்டும். பேச்சு வார்த்தை மூலமான ஒரு தீர்வைத் தவிர வேறு மாற்றீடு கிடையாது, அதுதான் அடிப்படை,அதற்கு நம்பிக்கையான பேரம் பேசுபவர்கள் தேவை, பேரம் பேசுபவர்கள்மீது ஒரு கண் வைத்திருப்பதற்கு ஏற்ற கண்காணிப்பாளர்கள் தேவை, இது ஒரு குறை நிரப்பு செயற்பாடே தவிர விரோத உறவு இல்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு அரசியலமைப்பில் வரைவு செய்யப்படுவது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு இரகசியம். அநேகமாக அது ஒரு அலகாக இருக்கும் ( பிற்போக்கு வார்த்தையான ஒற்றையாட்சி என்பதை அவர்கள் தவிர்த்து விடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்) ஆனால் பிராந்திய அதிகாரப் பகிர்வு நிச்சயம் உறுதியாக்கப்படும், இது பார்க்க எளிதாக இருந்தாலும் அதன் விபரங்களில்தான் பிரச்சினை இருக்கப் போகிறது.
ராஜபக்ஸ தோல்வியடைந்தபோது ஸ்ரீலங்காவை குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்துவதற்கு குறிப்பிடப்பட மாட்டாது என்று யதார்த்தவாதிகள் அனைவருக்கும் தெரியும். முதல் தடவையாக ஒரு நாடு ஐநா தலைமையிலான விசாரணையை ஏகமனதான சர்வதேச ஆதரவுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தக் கலப்புக் கருத்து முந்தைய ஆட்சியின் முறைகேட்டினாலும் மற்றும் மோசடியினாலுமே பிறந்தது. ஸ்ரீலங்காவின் நீதித்துறையை யாரும் நம்பமாட்டார்கள் அது ஒரு தசாப்த காலமாக ஜனாதிபதியின் கைப்பாவையாக செயற்பட்டது. இந்தப் பின்னணியில்தான் பிரித்தானியா மற்றும் கனடா என்பன பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளை வலியுறுத்தின, அதை ரணில் ஏற்றுக்கொண்டார் – அவருக்கு எங்கள் நீதித்துறையை பற்றி அவரது மாமனார் அதில் மோசடி நடத்திய காலம் முதலே மிக நன்றாகத் தெரியும். பொதுநலவாய நீதிபதிகளை நியமிப்பதற்கு ஜெனிவாவில் வைத்து அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது அனால் டேவிட் கமரூனின் வலியுறுத்தல் காரணமாக அது நிறைவேறியது. அமெரிக்காவின் திட்டத்தின் ஆழத்தை என்னால் அறிய இயலவில்லை. “விக்னேஸ்வரனின் நாடகமும் அமெரிக்காவினால் பிறப்பிக்கப்பட்ட சதியாக இருக்குமோ என நான் கவலைப்படுகிறேன், அதை என்னால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை” என எனது நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். கலப்பு முறையான பொதுநலவாய நீதிபதிகளை அகற்ற அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியது அல்லது தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்து அமெரிக்கா சதியில் ஈடுபட்டுள்ளது என்று நான் குற்றம் சாட்டவில்லை – அது நம்ப முடியாதது – ஆனால் நான் எச்சரிக்கையாக இருப்பதை நிறுத்தப் போவதில்லை.
ஜனநாயக எண்ணம் கொண்ட அரசாங்கத் தலைவர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களின்போது அவர்கள் வலியுறத்தியது, இந்த விசாரணை ஒரு போலித்தனமாக இருக்கப்போவதையோ மற்றும் பொதுநலவாய நீதிபதிகளை அகற்றும் நடவடிக்கையையோ தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்று. அதையிட்டு நான் திருப்தி அடைந்தேன், பிரதமர் தனது வழியினை இனவாத பின்விளைவுகளைப் பற்றிய அச்சம் இன்றி தொடரும் மன நிலையில் இருக்கவேண்டும், ஆனால் பிரதமர் இந்தப் பயம் இல்லாமல் இருப்பார் என்பதையிட்டு எனக்குத் திருப்தியில்லை. சில மாதங்களுக்கு முன்பு பேரினவாதம் வீதிகளில் செல்ல தூண்டப்பட்டது மற்றும் அது கடுமையாக அடித்து விரட்டப்பட்டது, அது நடத்தப்பட்டது அரசாங்கத்தால் அல்ல, ஆனால் அரசியல் செயற்பாட்டாளர்களும் மற்றும் சிவில் சமூகத்தவர்களும் அணி திரண்டதினால என நான் வாதிட்டேன். அதை இன்னமும் நடத்த முடியும் மற்றும் பிரதமர் தொழிற் சங்கங்களுடன் தனது புதிய இணைப்பை ஏற்படுத்திய பின்னர் அவர் தொழிலாள வர்க்கத்தினரிடம் அதேபோல மேல் முறையீடு செய்யலாம். ஆரம்பத்திலேயே நாங்கள் எதிர்கொள்ள முயன்றால் “சிங்க லே” ஆத்திரமூட்டலையும் செயலிழக்கச் செய்ய முடியும். கோட்டாவின் அடிவருடிகள் அதைத் தூண்டிவருவதாக நான் படித்தேன். வீதிகளில் முன்னோடி – பாசிசத்தை எதிர்கொள்ளுவது இப்போது ஒரு ஆரம்ப விடயமாக இருக்கலாம், காலப்போக்கில் நாடளாவிய ரீதியில் பன்முக ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டமான கல்வி மற்றும் கருத்தொருமிப்பை பாடசாலைகள் மற்றும் இராணுவம் ஆகியவற்றில் ஆரம்பிப்பதிலேயே அதை முறியடிப்பது தங்கியுள்ளது. இந்த அம்சத்தில் எனது தொடர்ச்சியான வேண்டுகோள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் போன்ற அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப் படுகிறது

 மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Loading...