Sunday, 31 January 2016

உறுதியாகிவிட்ட சு.கவின் பிளவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் தாயராகி வரும் நிலை
smsaயில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள பல்வேறு குழுக்களிடையே பகையுணர்வு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இரண்டு காரணிகளால், அதாவது, மஹிந்த ராஜபக்ஷ என்ற காரணியினாலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு ஒட்டிக் கொண்டிருந்த சிறு கட்சிகள் என்ற காரணியினாலும் சுதந்திரக் கட்சியின் பிளவு ஊர்ஜிதமாகிக் கொண்டு வருகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையினால், எதிர்காலத் தேர்தல்களின் போது, தமது அணியினருக்குப் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களிடையே உள்ள அச்சம் நியாயமானதே. எனவே, தனியான குழுவாக அல்லது தனியான கட்சியாக, எதிர்காலத் தேர்தல்களின் போது போட்டியிட அவர்கள் நினைப்பதும் நியாயமானதே.

எனவே தான், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க போன்றோர், தனியான கட்சி அமைக்கும் கருத்தைப் பிரசாரம் செய்தும் வெளிப்படையாகவே சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு சவால் விடுத்துக் கொண்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டும் இருக்கின்றனர்;.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள சிறு கட்சிகளான, மக்கள் ஐக்கிய முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சம சமாஜ கட்சி ஆகியவையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து, அண்மைக் காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளும், இனி மேலும் தமக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக இல்லை. ஏனெனில், ஐ.ம.சு.கூவினதும் சுதந்திரக் கட்சியினதும் தலைமை ஒன்றே. அத் தலைமை அச் சிறிய கட்சிகளின் தலைவர்களை அரசியல் 'கீழ்சாதிகளாகவே' கருதுகிறது.

உண்மையிலேயே, கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து, 'மஹிந்தவோடு எழுந்து நிற்போம்' என்ற கோஷத்துடன் ஓர் இயக்கத்தை ஆரம்பித்ததன் மூலம், ஐ.ம.சு.கூவுக்குள் பிணக்குகளை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள், இச்சிறு கட்சிகளின் தலைவர்களே. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அடுத்து நடைபெற்றதைப் போல் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் 2015ஆம் ஆண்டு புதிய தலைவரின் பின்னால் அணி திரள்வதை இந்த 'மஹிந்தவோடு எழுந்து நிற்போம்' இயக்கமே தடுத்தது.

2005ஆம் ஆண்டு, ஐ.ம.சு.கூவின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படும் போது, அவருக்கும் அப்போதைய ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையே, பலத்த பனிப்போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இருந்த பெரும்பாலான ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் அப்போது சந்திரிகா அணியிலேயே இருந்தனர்.

ஆனால், அந்த நிலைமை மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வரை மட்டுமே நிலவியது. மஹிந்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன், அதுவரை கடும் சந்திரிகாவாதிகளாக இருந்தவர்கள், முழு மனதுடன் மஹிந்தவை ஆதரிக்கத் தொடங்கியதோடு, சந்திரிகாவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கினர்.

ஆனால், தாம் தொடர்ந்து அரசியலில் இருக்கப் போவதாக சந்திரிகா அப்போது அறிவித்து இருந்தால், சுதந்திரக் கட்சியிலும் ஐ.ம.சு.கூவிலும் ஒரு சாரார் தொடர்ந்தும் மஹிந்தவுக்கு எதிராக அவரை ஆதரித்திருக்க முடியும். அது சுதந்திரக் கட்சியைப் பிளவு படுத்தியிருக்கும்.

ஆனால், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையடுத்து, அரசியலில் இருந்து சந்திரிகா ஓய்வு பெறுவது ஊர்ஜிதமாகியதால், அவரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவர்களும் வளர்க்கப்பட்டவர்களும் அவரை ஏறத்தாழ வணங்கிக் கொண்டு இருந்தவர்களும் நன்றி மறந்தவர்களாக, திடீர் திடீரென தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு, தமது பிழைப்புக்காக மஹிந்தவோடு சேர்ந்து சந்திரிகாவுக்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்தனர். ஆனால், இந்த நிலைமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாது கட்சியைப் பாதுகாத்தது.

இம்முறையும், அரசியலிலிருந்து மஹிந்த ஓய்வு பெற்றிருந்தால், அவரது ஆதரவாளர்கள் அனைவருமே கட்சியின் புதிய தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் பின்னால் அணிதிரண்டிருப்பார்கள். அதனால் கட்சி பிளவுபடும் வாய்ப்புக்கள் அடைபட்டுப் போயிருக்கும். அவ்வாறு மஹிந்தவின் ஆட்கள், மைத்திரியின் பின்னால் அணி திரளும் அறிகுறிகளை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் காணக்கூடியதாகவும் இருந்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன், தமது கட்சிக்கு எதிராக அத் தேர்தலின் போது போட்டியிட்ட மைத்திரியை கட்சியின் புதிய தலைவராக, சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் நியமித்துக் கொண்டமை அதற்கு உதாரணமாகும்.

அவர்கள் விரும்பியிருந்தால், மைத்திரியை கட்சியின் தலைவராக நியமிக்காது இருந்திருக்கலாம். மஹிந்தவின் ஆதரவாளர்களே அப்போது கட்சியின் மத்திய குழுவில் பெரும்பான்மையினராக இருந்தனர்.

அந்த பெரும்பான்மையைப் பாவித்து, கட்சி யாப்பை மாற்றி மைத்திரி, கட்சியின் தலைவராவதை அவர்கள் தடுத்திருக்கலாம். அதேவேளை, நாடாளுமன்றத்தில் தமக்கிருந்த பெரும்பான்மை பலத்தைப் பாவித்து, ரணில் விக்கிரமசிங்க பிரதமராவதை த்தடுத்து, மைத்திரி, புதிய அரசாங்கத்தை அமைப்பதையும் அவர்கள் தடுத்திருக்கலாம்.

ஆரம்பத்தில் அவ்வாறு மஹிந்தவை கைவிட்டு மைத்திரியின் பின்னால் அணிதிரளும் அறிகுறிகளைக் காட்டிய சுதந்திரக் கட்சியின் மஹிந்தவின் குழுவினர், அவர்களோடு இருந்த சிறிய கட்சிகள் மஹிந்தவுக்காகக் குரல் கொடுக்க முற்பட்டதையடுத்து தெம்பூட்டப்பட்டார்கள். சிறிய கட்சிகளின் 'மஹிந்தவோடு எழுந்து நிற்போம்' இயக்கம் வலுப்பெற்றதோடு, ஜனாதிபதித் தேர்தல் தோல்வியினால் ஏமாற்றமடைந்து வெகுவாக மனம் நொந்து இருந்த மஹிந்தவின் ஆட்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புக்கள் தோன்றின.

சுதந்திரக் கட்சியினுள் இருந்த கடும் போக்கு மஹிந்தவாதிகளைப் போல் சோர்வடையாது, மஹிந்தவுக்காகக் குரல் கொடுக்க, சிறிய கட்சிகளுக்குப் பலத்த காரணமொன்று இருந்தது. தேர்தல் மூலம், பிரதேச சபையொன்றிலாவது ஓர் ஆசனத்தையேனும் வென்றெடுக்கக் கூடிய வாக்குப் பலம் இந்த சிறிய கட்சிகளிடம் இல்லை. ஏதாவது பிரதான கட்சியொன்றில் தொற்றி எங்காவது ஓரிரு ஆசனங்களை வென்றெடுக்க மட்டுமே இச் சிறிய கட்சிகளால் முடியும்.

அவர்களை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சுதந்திரக் கட்சியின் புதிய தலைவர் மைத்திரிபாலவும் அவர்களை நண்பர்களாகக் கருதவில்லை. எனவே, அவர்கள் ஏதாவது ஒரு பிரதான கட்சியில் தொற்றிக் கொண்டே ஆக வேண்டும். எனவே, அக் கட்சிகள் மஹிந்தவை மீண்டும் நடைமுறை அரசியலுக்கு இழுக்க முற்பட்டன.

அதேகால கட்டத்தில், மஹிந்தவும் புதியதோர் நெருக்கடியை எதிர்நோக்கினார். புதிய அரசாங்கம் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுககும் எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, பல வழக்குகளைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தது. எனவே, அவருக்கும் அரசியல் பக்கபலம் தேவைப்ப்டது. எனவே மஹிந்த அவர்களில் ஒருவராகினார்.

இவ்விரு சாராரிடையேயான இந்த ஒற்றுமையின் விளைவாக, காணாமற் போகவிருந்த சிறிய கட்சிகளுக்கு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, மஹிந்தவின் ஆதரவாளர்களின் விருப்பு வாக்குகளின் காரணமாக, ஓரிரு நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைத்தன. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அதன் தலைமைக்கு எதிராக மஹிந்தவின் தலைமையில் நிரந்தர குழுவொன்றும் உருவாகியது.

இப்போது மற்றொரு தேர்தல் அண்மித்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஐ.ம.சு.கூவின் கீழ் முன்னர் போட்டியிட்ட சிறிய கட்சிகளுக்கு, இனி அந்தச் சந்தர்ப்பம் கிடைக்காது என்ற நிலைமை உறுதியாகி வருகிறது. இந்த நிலையில் தான், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பிலவும், தாம் இனி மேல் ஐ.ம.சு.கூவின் கீழ் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து இருக்கிறார்கள். இது, திராட்சை புளிக்கிறது என நரி கூறிய கதையை ஞாபகப்படுத்துகிறது.

ஆனால், அவர்கள் தனித்துவிடவில்லை. ஸ்ரீல.சு.கவிலும் இதேபோல் எதிர்காலம் நிச்சயமில்லாத மஹிந்த ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இந்த சிறிய கட்சிகளுடன் இணைந்து கொள்ள மஹிந்தவிடமிருந்து சமிக்ஞையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், 'நான், ஓர் உண்மையான சுதந்திரக் கட்சிக்காரன்' என மஹிந்த கூறிக் கொண்டு இருக்கிறார். அது உண்மையாக இருந்தால், அதன் அர்த்தம் அவர் ஒருபோதும் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என்பதே. ஆனால், அவரது சகோதரர்களான கோட்டாபயவும் பஸிலும் புதிய கட்சி வருகிறது வருகிறது என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

மைத்திரிபாலவின் ஆட்சியின் ஆரம்பத்திலிருநதே தமக்கு ஆதரவாக இருக்கும் சிறிய கட்சிகள் விடயத்தில் மஹிந்த இவ்வாறே தான் நடந்து கொண்டிருக்கிறார். அவர், அந்தச் சிறிய கட்சிகளின் தலைவர்களை முன்னால் தள்ளிவிட்டு, ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கோபத்துக்கு அவர்களை ஆளாக்கிவிட்டு தாம் ஒதுங்கிக் கொள்கிறார்.

'மஹிந்தவோடு எழுந்து நிற்போம்' என்ற இயக்கத்தின் எந்தவொரு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டு வருகிறார். குறைந்தது, தமது தம்பி கோட்டாபயவை பொலிஸார் விசாரணை செய்வதை ஆட்சேபித்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது, மஹிந்த அதில் கலந்து கொள்ளவும் இல்லை. தமது பெயரைக் கூறிக் கொண்டு சிறிய கட்சிகள் பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போதும் மஹிந்த அவற்றுக்கு உறுதியாக ஆதரவு அளிப்பதில்லை.

சிறிய கட்சிகள் ஆரம்பிக்கப் போகும் புதிய அரசியல் கட்சியில் மஹிந்தவும் இணைந்து கொள்வாரா என்று அண்மையில் ஊடகவியலாளர்கள் வினவிய போது, அவர் தக்க தருணத்தில் சரியான முடிவை எடுப்பார் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன அளித்த நழுவிச் செல்லும் பதிலிலிருந்து, மஹிந்தவின் உறுதியின்மையினால் அந்தச் சிறிய கட்சிகள் அசளகரியத்துக்குள்ளாகியிருப்பது தெளிவாக தெரிகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்தவே தலைமை தாங்க வேண்டும் என மஹிந்தவின் ஆதரவாளர்கள் இப்போது கோருகிறார்கள். அதனை ஏற்பது மைத்திரியின் தலைமை செல்லுபடியற்றது என்று மைத்திரியே ஏற்றுக் கொண்டதற்கு சமமாகும். அதேவேளை, மஹிந்தவை மீண்டும் பலப்படுத்த மைத்திரி இடமளிப்பாரா என்பது சந்தேகமே.

மறுபுறத்தில், மஹிந்தவின் தலைமையிலேயே தேர்தலை வெற்றி பெற முடியும் என்ற மஹிந்த ஆதரவாளர்களின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில், அவர் ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரியிடமும் தோல்வி கண்டவர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது, அவரைப் பிரதமராக்குவதே அவரது ஆதரவாளர்களின் இலக்காகியது. அந்தத் தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். எனவே, மைத்திரி விட்டுக் கொடுக்கும் சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு தென்படவில்லை.

மஹிந்தவின் ஆதரவாளர்களுக்கும் தனியாகப் போட்யியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, சுதந்தரக் கட்சி, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலோடு பாரியளவில் பிளவுபடக்கூடும். இது, ஐ.தே.கவுக்குச் சாதகமான நிலைமையாகும்.

அதேவேளை, ஊழல் ஒழிப்பு, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்ட போதிலும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் மைத்திரியையும் ஐ.தே.கவையும் ஆதரித்த மக்கள் இன்னமும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கும் நிலையில் இல்லை.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த அணியாகவும் மைத்திரி அணியாகவும் பிரிந்து போட்டியிட்டால் மைத்திரி அணிக்கு அரசாங்கத்தை விமர்சிக்க முடியாமல் போய்விடும். ஏனெனில், அவர்களும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

மஹிந்த அணியிடமும் அரசாங்கத்துக்கு எதிராக பலமான ஆயுதங்கள் இல்லை. மத்திய அரசாங்கத்தின் அதிகாரமும் ஐ.தே.கவிடமே  இருக்கிறது. எனவே, ஐ.தே.க இலகுவாகவே உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளக் கூடும்.

ஆனால், மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்துக்கும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்துக்கும் பின்னர், தேர்தல் நடைபெற்றால் இனவாதத்தை தூண்ட மஹிந்த அணிக்கு சில ஆயுதங்கள் கிடைக்கக் கூடும். அது, ஐ.தே.கவைப் பாதிக்கக் கூடிய ஒரு விடயமாகும்.
நன்றி: தமிழ்மிரர்
Loading...