Sunday, 7 February 2016

இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் சுற்றுப்பயணம்:போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளை ஆய்வு செய்கிறார்

இலங்கைக்கு 4 நாள்கள் சுற்றுப்பயணமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசேன் சனிக்கிழமை வந்தார்.
seyad

அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து அந்நாட்டு அரசு மேற்கொண்டுவரும் விசாரணை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

கொழும்பு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஹுசேனை, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஹுசேன் செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கை அதிபர் சிறீசேனாவை சந்தித்துப் பேச இருப்பதாகவும், இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்குமென்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் 4 நாள்கள் தங்கியிருக்கும் ஹுசேன், யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்.7) செல்ல இருக்கிறார். அதையடுத்து, துறைமுக நகரான திரிகோணலைக்கு திங்கள்கிழமை அவர் செல்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோரை ஹுசேன் சந்தித்துப் பேச இருக்கிறார். மேலும், அந்தந்தப் பகுதி அரசு அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

சிங்கள கட்சி ஆர்ப்பாட்டம்: இதனிடையே, ஹுசேனின் வருகையைக் கண்டித்து கொழும்பில் சிங்களக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதேபோல், யாழ்ப்பாணத்துக்கு ஹுசேன் ஞாயிற்றுக்கிழமை வருகை தரும்போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர் உரிமை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

முன்னதாக, இலங்கையில் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் ஹுசேன் கடந்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைகள், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சித்திரவதைகள், படுகொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து குற்றம்சாட்டியிருந்தார். இதேபோல், விடுதலைப் புலிகள் தங்கள் படையில் சிறார்களை சேர்த்தது, தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தியது, படுகொலைகளில் ஈடுபட்டது குறித்தும் அறிக்கையில் புகார் தெரிவித்திருந்தார்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றம், மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், போர்க் குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகளையும் இலங்கை அரசு ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
Loading...