சீனாவுடன் புதிய திட்டங்கள் : பிரதமர்
இலங்கையின் எதிர்காலத் திட்டம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ஆற்றியிருந்த உரை தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பிரித்தானியா வெளியேறினாலோ மத்திய கிழக்கில் வீழ்ச்சி ஏற்பட்டாலோ அது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த பிரதமர், கடந்த காலத்தில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் முழுமையான விபரத்தை அறிய முடியாதுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்காக கடன்பெற திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறான பிரச்சினை எழாவிட்டால் கடன் பெறவேண்டிய தேவை எற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் எப்ரல் மாதம் தான் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தன்னோடு அமைச்சர்களான நிமல் சிறிபால.டி.சில்வா, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம ஆகியோரும் அங்கு வருகை தரவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராயவும் எதிர்வரும் இரண்டு மூன்று வருடங்களில் அமுல்படுத்த வேண்டியுள்ள புதிய திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரம சிங்க தெரிவித்துள்ளார்.
