கடந்த சில தினங்களாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை வீழ்த்த வேண்டுமென்ற கோஷம் கிழக்கில் அதிலும் முக்கியமாக அம்பாறை மாவட்டத்தில் எழுச்சி என்றும் புரட்சியொன்றும் மிகவும் பரவலாகப் பேசப்படும் விடயமாகும். ஆனால் மற்ற மாவட்டம்களில் இது பற்றி ஒரு விதமான ஆரவாரம் ஒன்றுமில்லையென்பதை நாம் அவதானிக்கக் கூடியதாவுள்ளது. இது பற்றி நான் எனது கருத்தைக்கூற வேண்டுமானால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை தற்போது வீழ்த்த நினைப்பது முட்டாள் தனம் என்றே கூறுவேன் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்
அவர் மேலும் குறிப்பிடுகையில், அம்பாறை மாவட்ட வாக்களர்களைப் பொறுத்த வரை அரசியலில் தேர்தல் காலங்களில் மந்த புத்தியுள்ளவர்கள் என்றே கூற வேண்டும். உதாரணத்துக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்த ஒரு அரசியல்வாதி ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார். அத்தேர்தலில் அவருக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்தனர் என்றால், அம்மக்களின் அரசியலில் அவர்கள் மந்த புத்தியுள்ளவர்கள் என்பது நிரூபணமாகிறது.
தற்கால சூழ்நிலையில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தலைமைப் பதவியிலிருப்பது தான் சரி. ஏனெனில், உள்ளூரிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் அவர் முஸ்லிம்களின் தலமை என்று மதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அடையாளம் காணப்பட்டவராகும். மேலும், அவர் கிழக்கைச் சேர்ந்தவர் இல்லையென்பது ஒரு குற்றச்சாட்டு. அது ஒரு புறமிருக்க பிழைகள் எல்லாம் தலைமை மேலில்லை. கிழக்கு மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே பொறுப்பு. உங்களது தேவைகளை அவர்களிடமே எத்தி வையுங்கள். பாரளுமன்றத்தில் வாய் திறக்காத பிரதிநிதிகளைத் தெரிவு செய்தது உங்கள் பிழை. எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்? முந்திய காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் தான் பல அபிவிருத்திகளைச் செய்தனர். ஏன் தற்போது இவர்களால் முடியாதுள்ளது. முதலில் அதற்கான காரணத்தைக் கண்டு பிடியுங்கள் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.

