Friday, 17 February 2017

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளரின் கேள்விகளுக்கு அந்தக் கட்சியின் தலைவர் பதிலளிக்கத் தயாரா?

கிழக்கு முதலமைச்சர் பதவி தனது கட்சிக்கு கிடைத்தால்  கிழக்கு மாகாணத்தையே குடிசையின்றி ஆக்குவேன்
-------------------------------------------------------- 
மேற்படி செய்தியை சில அமைச்சர்கள்   தெரிவித்திருப்பதாக சமூகவலைத்தளங்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைச்சர்களிடம் பின்வரும் கேள்விகளை எழுப்பவிரும்புகின்றோம். 

1) மாகாணசபைகள் பெரும்பாலும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில்தான் செயற்படுகின்றன; என்பதை இந்த அமைச்சர்கள் அறிவார்களா? ( சிறிய ஒரு சொந்த வருமானத்தைத் தவிர)

2) அது ஏன் அல்லது மாகாணசபைகள் சொந்த நிதியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகளை அவர்கள் அறிவார்களா?

3) ஒவ்வொரு மாகாணசபைக்கும் வருடாந்தம் உட்கட்டமைப்பு வசதிக்காக மத்திய அரசால் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகின்றது; என்பது உங்களுக்கு தெரியுமா?

4) அந்த சிறிய தொகையில் வீடமைப்பு அமைச்சுக்கு எத்தனை விகிதம் ஒதுக்கப்படுகின்றது; என்பதை அறிவார்களா?

5) மாகாணசபைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகின்ற பொறிமுறையை அறிவார்களா ?

6) கிழக்கு மாகாணத்தில் தேவையான வீடுகளின் எண்ணிக்கையை அறிவார்களா?

7) இதற்குத் தேவையான நிதியினை மாகாணசபையினூடாக பெறுவார்களா? அவ்வாறாயின் எப்படி என விளக்குவார்களா?

8) அல்லது மத்திய அரசினூடாக பெறுவார்களா? அவ்வாறாயின் எப்படி என விளக்குவார்களா? 

9) அல்லது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவார்களா? அவ்வாறாயின் எப்படி என விளக்குவார்களா?

10) அல்லது தனது கட்சிக்கு அடுத்த கட்சியைவிட ஒரு ஆசனமேனும் குறைவாக கிடைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் ; என்று சம்மாந்துறையில் வைத்து கூறியதுபோல் மேடைகளைக் கண்டால் விடுகின்ற வாய்ச்சவடாலா?

அவை ஒரு புறம் இருக்கட்டும். 

11) இவ்வளவு சக்திவாய்ந்த அமைச்சர்கள், வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட  மக்களின் வீட்டுத்தேவைகளில் 1/4 பங்கைத்தானும் இன்னும் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது ஏன்?

12) ஆகக்குறைந்தது முசலிமக்களுக்கெதிராக அநியாயமாக வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானியைக்கூட இன்னும் ரத்துச் செய்ய முடியாமல் இருப்பது ஏன்? 

25 வருடங்கள் கஷ்டப்பட்ட சொந்த மக்களுக்கே வீடுகட்டிக்கொடுக்க, முழுமையாக மீள்குடியேற்ற ஆண்டுகள் 7 கடந்தும் முடியாதவர்கள், 5 ஆண்டுகள் கடந்தும் ஒரு பிழையான வர்த்தமானியை ரத்துச்செய்ய முடியாதவர்கள், தனக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவுசெய்ய முடியாதவர்கள், மாகாணசபைகளே முடம், எதுவும் செய்யமுடியாது என்று தமிழ்த்தலைவர்கள் மட்டுமல்ல, சிங்கள முதலமைச்சர்களே முனகும்போது, கிழக்கு முதலமைச்சர் பதவியைத் தரட்டாம், வீடில்லாப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பார்களாம். 

இவர்களின் அறிவிப்புக்களைப் பார்க்கும்போது ஓர் உள்ளூர் பழமொழிதான் ஞாபகம் வருகின்றது.

" பெருவிசாதி (பெருவியாதி) கொண்டது பெலாப்பழம் ( பலாப்பழம்) கேட்டுச்சாம்."

கிழக்கு மக்களை மட்டுமல்ல இந்த நாட்டு முஸ்லீம்களை, சந்தர்ப்பவாதிகள் ஏமாற்றுவதற்கு இனியும் அனுமதிக்க முடியாது. சற்றுப் பொறுத்திருங்கள். இன்ஷா அல்லாஹ்.

வை எல் எஸ் ஹமீட் 
செயலாளர் நாயகம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Loading...