தனக்குத் தானே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வௌியான தகவலில் உண்மை இல்லை என, சயிடம் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் சமீர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் அந்த துப்பாக்கி பிரயோகத்தை ஏற்பாடு செய்யவில்லை எனவும், தற்போது இந்த விடயம் குறித்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களை தனக்குத் தெரியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத தெரணவுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
இதேவேளை, சுமார் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொலிஸார் இந்த விடயம் குறித்து தன்னிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் சமீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் தன்னை சிறந்த முறையில் நடத்தியதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும், சில இணையத்தளங்கள் தான் கைதுசெய்யப்பட்டதாக செய்திகளை வௌிட்டதாகவும் கூறிய அவர், தான் கைதுசெய்யப்படவோ, தடுத்து வைக்கப்படவோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸாரின் அடுத்த கட்ட விசாரணைகளுக்கும் தான் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவங்களால் சயிடம் நிறுவனத்திற்கு சில அழுத்தங்கள் ஏற்பட்டமையால், விசாரணைகள் நிறைவடையும் வரை தனக்கு விடுப்பளிக்கும் படி, அந்த நிறுவனத்தின் தலைவரிடம் கோரியதாகவும், இதனையடுத்து தற்காலிகமாக பதவி விலகிய தன்னை பதவி நீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வௌியானதாகவும் அதில் உண்மையில்லை எனவும், சமீர தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், தனது தகமைககள் குறித்து பலர் விவாதிப்பதகாக சுட்டிக்காட்டிய அவர், ஒரு வைத்தியராக தான் உயர்ந்த தகுதி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
