Friday, 7 July 2017

அரசும் மக்களும் சிந்திக்க வேண்டிய விடயம்கள்

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்க வேண்டும். ஆனால் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றில் தன்னிறைவு அடையாமல் ஆரோக்கியமான இலங்கையை  எவ்வாறு உருவாக்கப் போகிறோம் என்பதுதான் நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி. 

ஒரு பக்கம் வருவாய் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபக்கம் மனிதனின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல். முக்கியமாக தற்போதுள்ள விலைவாசி உயர்வு மனிதனை மட்டும் அல்ல, மனிதன் சார்ந்துள்ள அனைத்து விசயங்களையும் பாதிக்கிறது. உணவுப் பண்டங்கள்,  வாகனங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றின் விலைஉயர்வு இலங்கையின்  வளர்ச்சியைப் பாதிக்கும் வெட்டுக் கிளிகளாக உள்ளது. உலக நாடுகளில் ஏற்படும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கூட இலங்கை  போன்ற வளரும் நாடுகளை மிகவும் பாதிக்கவே செய்கிறது.

உண்மையான ஏழைகளுக்கு அரசின் திட்டங்கள் அவ்வளவாக சென்றடைவது இல்லை. ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களின் ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்க ஆரம்பித்துவிட்டனர் அரசியல்வாதிகள். ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியை மதிப்பீடு செய்வதும், அதைப் பார்த்து ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் பெருமிதம் கொள்வதாலும் என்ன பயன்? நாட்டின் வருவாய் உயர்வு மட்டும் உண்மையான வளர்ச்சியைத் தீர்மானிக்காது. தற்போது நாட்டின் வருவாய் மட்டும் உயரவில்லை. உள்நாட்டு தேவையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.  இதன் காரணமாக உணவுப் பண்டங்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனை உண்மையான வளர்ச்சியாக கருத முடியாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கைத் தரமும் ஒரே சீராக உயர்த்தப்படுதல் வேண்டும்.

நாட்டின் அடிப்படை தேவைகளான உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், சுத்தமான குடிநீர் போன்றவை எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைத்தல் வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு படிப்பறிவு அவசியமான ஒன்றாகும். தற்போதுள்ள கல்வி வளர்ச்சி விகிதம் மேலும் வளர்ச்சியடைய வேண்டியுள்ளது. படிப்பறிவு பெற்றோரில் ஆண் பெண் விகிதாச்சார வேற்றுமை அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் அவற்றின் தரமும் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய தர நிலவரம் ஏற்புடையதாக இல்லை என்பதே உண்மை.

தரமான கல்வி மட்டுமே சமூகத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது தரமான கல்வி எல்லோருக்கம் பாரபட்சமில்லாமல் கிடைக்கிறதா என்றால் இல்லை. கல்வி நிறுவனங்கள் தரும் சான்றிதழ்கள் சமூக அந்தஸ்துக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் மட்டுமே பயன்படுவது போல் தெரிகிறது. கல்வி என்பது வெறும் பட்டங்கள் பெறுவது மட்டுமல்ல, படித்த கல்வி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பது மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தற்போது கல்வி நிறுவனங்கள் வளர்ந்த அளவு கல்வியின் தரம் உயரவில்லை. உதாரணமாக படித்த கல்விக்கும், சிந்தனைக்கும் தொடர்பில்லாத நிலை. மேலும் இந்த கல்வி முறை சமூக முன்னேற்றத்திற்கு உதவுமா என்பது கேள்வியாக உள்ளது. 

சுகாதார வசதியில் இன்னும் பின்தங்கியே ய உள்ளோம். சுத்தமான குடிநீரும், சுத்தமான காற்றும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள். மேலும் நகர்மயமாதல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 

மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் மனிதன் உயிர் வாழ்வதற்கு வழி செய்கிறது. ஆனால் ஆரோக்கியத்தோடு வாழ்விற்கு சத்துள்ள உணவும் அதற்கான சுற்றுப்புறச் சூழலும் மிக அவசியம். தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்தபட்ச கலோரிக்கும் குறைவான உணவே கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கடின வேலை செய்யும் தொழிலாளிக்கு 2400 கலோரிக்கும் அதிகமான உணவே தேவைப்படும். தற்போதுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலையில், உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய தரமான உணவுப் பொருள்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அன்றாட வருமானத்தில் உணவுக்காக மட்டும் 50% மேல் செலவிட வேண்டிய கட்டாய சூழ்நிலை, தற்போதுள்ள உணவு பணவீக்கத்தினால் மாத ஊதியம் பெறுவோருக்கே அவர்களுடைய குடும்பப் பொருளாதாரம் பாதிக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. அத்தியாவசிய சத்துள்ள தரமான பொருள்களை  எல்லோராலும் வாங்கிச் சாப்பிடக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கூலித் தொழிலாளியின் சம்பளம் நாள் ஒன்றுக்கு ரூ.500 க்கும் குறைவாக இருந்திருக்கலாம். தற்போது அவர்களின் கூலி 500% மேல் உயர்ந்திருந்தாலும்கூட அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுப் பொருள்களை வாங்கக்கூடிய சூழ்நிலை இல்லை. காரணம், பெரும்பாலான மக்களின் வாங்கும் சக்தி குறைவாக உள்ளது.  இந்த வருவாய் ஏற்றத் தாழ்வுகள் ஏழை பணக்காரர் என்ற இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது.

இன்று காலநிலை மாற்றம் (Climate change) உலக அளவில் பேசப்படும் முக்கியமான விசயமாக உள்ளது. இதில் இலங்கையின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய நீண்டகால திட்டங்கள் என்னவாக இருக்க முடியும். இலங்கையின் தானிய உற்பத்தி மற்றும் தனிநபர் கலோரி உணவு நுகர்வு (Per capita calorie consumption) வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வளர்ந்த வண்ணம் உள்ளது. தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் சாமானிய மக்களை பல்வேறு வகையில் பாதிக்கவே செய்கிறது. 

மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளோம். வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது ஒரு ஏக்கருக்கு 4ல் ஒரு பங்கு மட்டுமே இலங்கையில்  உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். விவசாய உற்பத்தியில் வளர்ச்சி இருந்தாலும், உற்பத்திப் பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவையில் சுயசார்புடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும். இதற்கு இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், எல்லோருக்கும் அவை பாரபட்சம் இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சிறு தொழில்களை, குடிசை தொழில்களைப் பாதுகாப்பது உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நாட்டின் உண்மையான சமூகப் பாதுகாப்பு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வேதோடு மட்டுமின்றி மனித வாழ்வாதாரங்களைப் பெருக்கச் செய்வதே.குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் மட்டுமே மேலும் செல்வங்களைப் பெறமுடியும். தேடிய செல்வங்களை அனுபவிக்க முடியும். மேலும் பல புத்தாக்கங்களை செய்த வண்ணம் இருக்க முடியும்.

தற்போது உணவுப் பிரச்சனை முக்கியமான பிரச்சனையாக உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம், உணவு உற்பத்தி ஆகியவற்றிற்கு நீண்டகால திட்டங்கள் வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்வி, சுகாதார வசதி, சத்தான உணவு, இருப்பிட வசதி ஆகியவற்றை உறுதி செய்து தருவது மிக அவசியம்.

வளர்ச்சியென்பது நாட்டின் தேசிய வருமானமும், தனிநபர் வருவாயும், அன்னியச் செலாவணி இருப்பும், அன்னிய முதலீடும் மட்டுமே ஆகாது. நாட்டில் உள்ள அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நல்ல மனநிலையோடும் வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும். அதற்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் கிடைக்கச் செய்தல் வேண்டும். தற்கால நாட்டின்  நடப்பு பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா எத்திவைத்தார்





Loading...
  • Qatar UN envoy calls for elimination of root causes of terrorism18.06.2015 - Comments Disabled
  • மைத்திரிபால சிறிசேனவின் கருத்து வெளியானதையடுத்து, மகிந்த ராஜபக்ச அதிர்ச்சி15.07.2015 - Comments Disabled
  • 29.06.2015 - Comments Disabled
  • ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்04.07.2015 - Comments Disabled
  • பேருவளை துப்பாக்கிச் சூடு: 9 பேர் கைது05.10.2018 - Comments Disabled