வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனிக் கட்டணம் வசூலிக்கும் விதமாக சில திட்டங்களை அறிவித்திருந்தது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனவே இது குறித்து எதிர்ப்பினை பதிவு செய்யலாம் என்று தொலைத்தொடர்பு அமைப்பான 'ட்ராய்' (TRAI) அறிவித்தது.
இதையடுத்து 'நெட் நியூட்ராலிட்டி' எனப்படும் இணைய சமத்துவத்தை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். 'நெட் நியூட்ராலிட்டி'-க்கு ஆதரவாக முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர்.
இந்நிலையில், எதிர்ப்பினை பதிவு செய்த சுமார் பத்து லட்சம் பேர்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தனது இணைய தளத்தில் நேற்று பகிரங்கமாக வெளியிட்டது ட்ராய்.
தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் மக்களை ஏமாற்றும் வகையில் மின்னஞ்சல் அனுப்பும் மோசடி பேர்வழிகள் இனி மின்னஞ்சல் முகவரி தேடி அலைய தேவையில்லை. ட்ராய் இணையதளத்திற்கு சென்றால் போதும் 10 லட்சம் முகவரிகள் கிடைத்து விடும்.
இந்த முட்டாள்தனமான காரியத்தை செய்த ட்ராய் அமைப்பைத்திட்டி சமூக வலைதளங்களில் அனைவரும் கடுமையாக கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சில மணி நேரங்களாக ட்ராய் அமைப்பின் இணைய தளத்தை அடையாளம் தெரியாத சிலர் முடக்கியுள்ளனர்.
ட்ராயின் இந்த செயலுக்கு நெட்டிசன்களிடையே கண்டனங்கள் வலுத்து வருகிறது.