நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்காக பகல், இரவாக உறுப்பினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 24 இலட்சம் பெறுமதியான மோதிரம் காணாமல் போயுள்ளதாகவும், இதன் மூலம் திருடன் யாரென மக்களுக்கு புரிந்துகொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை தொலைத்து விட்டாராம்.
மோதிரத்தின் விலை 24 இலட்சம் என்றால் இதனை தனது சொத்து விபரத்தில் குறித்த உறுப்பினர் உள்ளடக்கியுள்ளாரா என பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை அணிந்துக்கொண்டு எதற்கு நாடாளுமன்றம் செல்ல வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 24 இலட்சம் பெறுமதியான மோதிரம் அணிகிறார் என்றால் திருடர்கள் யார் என்பதை மக்களால் இலகுவில் அறிந்துகொள்ள முடியும்.
அது மாத்திரமல்லாது இவ்வாறான பல விடயங்களை என்னால் கூற முடியும். இது மாதிரியான ஒரு யுகம் மாற்றமடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
