Thursday, 23 April 2015

இலங்கை பற்றிய வரலாறு

புதிய சீலா யுகத்தில்கூட இலங்கையில் உணவுகளை சேகரிப்போர், நெற்பயிர் செய்கை விவசாயிகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் காலம் பற்றி தெரிந்த விடயங்கள் மிகவும் குறுகியவையாகும். எமது எழுத்து மூலமான வரலாறானது, இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களின் வருகையுடனேயே ஆரம்பமாகின்றது. ஆரியர்கள் இரும்பு பாவனை, வளர்ச்சியடைந்த விவசாயம் மற்றும் நீர்ப்பாசன முறைமைகளை அறிமுகப்படுத்தினர். அவர்கள் நாட்டை நிர்வகிக்கும் அரசாங்க முறைமையையும் அறிமுகம் செய்தனர். ஆரிய குடியிருப்புக்களில் அநுராதபுர பண்டுகாப்பய மன்னனின் ஆட்சியின் கீழ் பலமிக்க இராசதானியொன்று உருவானது. மரபு வழியான வரலாற்றின் பிரகாரம் அநுராதபுரத்தின் ஸ்தாபகராகவும் அவரே கருதப்படுகிறார்.

பண்டுகாப்பய மன்னனின் வம்ச வழியாக வரும் ஒருவரான தேவநம்பியதிஸ்ஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் கி.மு. 247 இல் இந்நாட்டிற்கு பௌத்த தர்மமானது. இந்தியாவின் அசோக்க சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரரினால் கொண்டுவரப்பட்டது. பௌத்த தர்மமானது இந்நாட்டின் கலாசார சிறப்புத் தன்மைக்கு வழிகாட்டியமையால் இலங்கை வரலாற்றிலே இந்நிகழ்வானது மிக முக்கியத்துவமிக்க ஒன்றாக கருதப்படுகின்றது. இவ்வாறானதொரு புதிய கலாசாரம் தோற்றம் பெற்றமையால் இலங்கையானது செழிப்புமிக்க ஒரு நாடாக மாறியது.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் பாரியதொரு பகுதி தென் இந்திய ஆக்கிரமிப்பாளன் ஒருவரின் கட்டுப்பாட்டிற்கு உள்ளானது. கிறிஸ்தவ ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையை ஆட்சிசெய்தவர்ளாக, நீர்ப்பாசனத் துறையில் கவனம் செலுத்தி பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக வம்ச வழியாக வந்தவர்களான லம்பகர்ன எனும் வம்சாவளியினரைக் குறிப்பிடலாம். இந்த வம்சத்தின் சிரேஷ்ட மன்னரான (கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலே) மஹாசேன மன்னன், பாரிய அளவிலான வாவிகளாக காணப்படுகின்ற நீர்பாசன நீர்த்தேக்கங்களை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்தார். குளங்களை கட்டுவித்த மற்றுமொரு சிரேஷ்ட மன்னராக தாதுசேன மன்னரைக் குறிப்பிடலாம். இந்த மன்னரை கொலை செய்த அவரது மகன் காசியப்பன் சீகிரியாவை தமது அரச நகரமாக மாற்றியமைத்துக்கொண்டு சீகிரியா கல்லின் உச்சியினை தமது ஆட்சியின் தலைநகரமாக மாற்றிக் கொண்டான்.

தென் இந்திய ஆக்கிரமிப்புக்களின் பிரதிபலனாக அநுராதபுர இராசதானியானது கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் தோல்விகண்டது. 1 ஆவது விஜயபாகு மன்னன் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்து கி.பி. 11 ஆவது நூற்றாண்டிலே பொலன்னறுவையை தமது தலைநகரமாக மாற்றினான். பொலன்னறுவையை ஆட்சி செய்த ஏனைய சிரேஷ்ட மன்னர்களாக மஹா பராக்கிரமபாகு மற்றும் நிஸ்ஸங்கமல்ல எனும் மன்னர்கள் காணப்பட்டதுடன், அவர்கள் கட்டடக் கலை துறையில் பெறுமதிமிக்க பல கட்டடங்களை நிர்மாணித்து நகரத்தை அலங்கரித்தனர்.

எதிரிகளின் ஆக்கிரமிப்புக்கள் அடிக்கடி இடம்பெற்று வந்தமையால் தலைநகரமானது இடத்திற்கிடம் மாற்றப்பட்டு, 1505 ஆம் ஆண்டிலே போர்த்துக்கேயர்கள் ஆக்கிரமிக்கும்போது மேற்குப் பிரதேசத்தின் சமவெளியான கோட்டையானது பிரதான நகரமாக காணப்பட்டது. போர்த்துக்கேயர் பலசரக்கு வியாபார நோக்கத்திற்காகவே இங்கு வந்தனர். எனினும் கடற்கரை பிரசேங்களை தமது கட்டுப்பாட்டின்கீழ் 1956 ஆம் ஆண்டுவரையில் வைத்திருந்ததுடன், அதன் பின்னர் அதனை ஆக்கிரமித்த ஒல்லாந்தர்களும் இதனையே பின்பற்றினர். ஒல்லாந்தர்களின் ஆட்சியானது, 1656 முதல் 1796 வரையில் காணப்பட்டது. 1796 ஆம் ஆண்டிலே அவர்களை விரட்டியடித்து பிரித்தானியர்கள் ஆட்சியினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இந்தக் காலத்தில் மலைநாட்டு இராசதானியானது கண்டியினைத் தலைநகரமாகக் கொண்டு இயங்கியது. நாட்டின் ஏனைய பிரதேசங்களை நிருவகித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்பத்திரும்ப தாக்கியபோதிலும் அவர்கள் தமது சுதந்திரத்தை பாதுகாத்து வந்தனர். 1815 ஆம் ஆண்டிலே கண்டி இராசதானியானது பிரித்தானியர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதுடன், இதனூடாக அவர்கள் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். நவீன தொடர்பாடல் முறைமைகள், மேலைத்தேய மருத்துவ முறைகள், ஆங்கிலக் கல்வி உட்பட பெருந்தோட்டக் கைத்தொழில் (முதன்முதலில் கோப்பி, அதன் பின்னர் தேயிலை, அதன் பின்னர் இறப்பர் மற்றும் தெங்கு) ஆகிய இவைகள் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் வளர்ச்சியடைந்தது. அமைதியான அரசியலமைப்பு பரிணாமத்தின் பின்னர் இலங்கையானது தமது சுதந்திரத்தை 1948 ஆம் ஆண்டிலே மீளப் பெற்றுக்கொண்டது. தற்போது இறைமையுள்ள குடியரசு ஒன்றான இலங்கையானது பொதுநலவாய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றில் அங்கத்துவம் வகிக்கின்றது.
Loading...