பாட்டி வைத்தியம் என பொதுவாக கூறிவந்த மருத்துவம் இன்று சர்வதேச அளவில் மிகப்பெரிய வைத்திய முறையாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே இயற்கை வைத்தியம் தொடர்பான ஆய்வுகளும், விவாதங்களும் அதிகரித்து வருகின்றன. இச்சூழலில்தான் அணிசேரா நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் இந்திய பிரிவின் சார்பில் உதகையில் மூலிகை மருத்துவம் தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, எகிப்து, தென்னாப்ரிக்கா, ஜிம்பாப்வே, கேமரூன், இரான், இராக், ஓமன், கம்போடியா உள்ளிட்ட 25 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு தங்களது நாடுகளைவிட குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதால் இதை தங்களது நாடுகளிலும் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பாகவே விவாதித்தனர். குறிப்பாக பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநர் அகமது பிலால் பேசுகையில், ""இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானில் மூலிகைத் தாவரங்கள் குறைவு என்பதோடு, அவற்றின் பயன்பாடு குறித்தும் அதிக விழிப்புணர்வு இல்லாததால் மூலிகை மருத்துவம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். எகிப்தின் பெனிசிப் பல்கலைக்கழக தலைவர் மோனா ஹபீஸ் ஹெட்டா பேசும்போது, ""எகிப்தில் மூலிகை மருத்துவம் பண்டைய காலத்திலேயே இருந்துள்ளது என்பதற்கு மம்மிகளே சிறந்த உதாரணம். ரசாயனங்கள் வரும் முன்னரே மூலிகைகளைக் கொண்டு மம்மிகள் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் அங்கு மூலிகை மருத்துவம் பிரபலமடையாததால் மூலிகை மருத்துவத்தைப் பிரபலப்படுத்த இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மூலிகைகளைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்று வளர்ப்பதோடு, மூலிகை மருத்துவத்தைப் பிரபலப்படுத்த தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்'' என்றார். ஜேஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் மைசூரு மற்றும் உதகை ஆகிய இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் மூலிகை மருத்துவம், மூலிகைகளிலிருந்து புதிய மருந்துகளைக் கண்டறிதல், மருந்து தயாரிக்கும் முறை, எதிர்கால மருத்துவத்திற்கு தேவையான புதிய உத்திகளைக் கடைபிடிக்கும்போது ஏற்படும் சவால்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு சீனாவில் அதிக அளவில் இருந்தாலும், அதற்கடுத்து இந்தியாவிலேயே பிரபலமடைந்துள்ளதால் இந்திய மருத்துவமுறை தொன்மையானது என்பதை ஒப்புக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவிலுள்ள மருத்துவ முறைகளை ஆவணப்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்தனர். ""பரம்பரை பரம்பரையாக சில மருத்துவ முறைகள் யாளப்பட்டாலும், அவை ஆவணமாக்கப்படாததால் அத்தகைய மருத்துவ முறைகளைக் குறித்து பிறர் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்களுடனேயே அத்தகைய மருத்துவ முறைகளும் அழிந்து விடுகின்றன. எனவே பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆவணப்படுத்த வேண்டியது அவசியம்'' என்றனர். ""ஆண்டுக்கு 5 முறையாவது இது போன்ற சிறப்புக் கருத்தரங்குகள் மூலம் பயன்படுத்தப்படும் மூலிகை மருத்துவம் தொடர்பாக தங்களுக்குள் விவாதித்து, கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதோடு, அணிசேரா நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டு ஒரு சிறப்புக்குழு அமைத்து ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி மூலிகை மருத்துவத்தால் நோயற்ற உலகை உருவாக்க வழி வகுக்க வேண்டும்'' எனவும் தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்த அனைத்து பிரதிநிதிகளுமே ஒருங்கிணைந்த மருத்துவ முறை வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர். மூலிகைத் தாவரங்களைப் பயிரிடுவதிலிருந்து அவற்றிலிருந்து தேவையான பொருட்களைப் பிரித்தெடுத்தல் தொடர்பாகவும், மருந்து தயாரிப்பது தொடர்பாகவும் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமே எந்த மூலிகையில் எத்தகைய மருத்துவக்குணங்கள் அடங்கியுள்ளன என்ற விபரம் முழுமையாக தெரிய வருமெனவும் குறிப்பிட்டனர்.
இக்கருத்தரங்கில் அணிசேரா நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முதன்மை இயக்குநர் அருண் குலசேரஸ்தா பேசும்போது, ""மூலிகை மருத்துவம் பக்க விளைவுகளற்றது. எனவே மக்கள் இயற்கை வைத்திய முறைக்கு மாற வேண்டும்'' என்றார். வளரும் நாடுகள் உணவு, இருப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காகவே போராட வேண்டிய நிலையில் மூலிகை மருத்துவத்தை மேம்படுத்துவதைக் குறித்து அதிகளவில் சிந்திப்பதில்லை எனக்குறிப்பிட்ட அவர், மூலிகை மருத்துவத்தைக் குறித்த ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டுமென்றார். மூலிகைத் தாவரங்களின் உற்பத்தி மற்றும் மூலிகை மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்மாநாடு அமைந்திருந்ததாக இதில் பங்கேற்ற அனைவருமே பெருமிதப்பட்டனர். - ஏ.பேட்ரிக்