நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு பல்வேறு நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டி வருகின்றன. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நேபாள மக்கள் உண்ண உணவு, குடிநீர் இன்றி பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் நேபாளத்துக்கு பல வகையான நிவாரணப் பொருட்களை அளித்த வண்ணம் உள்ளன. இதில் மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றன. பாகிஸ்தானும் தன் பங்கிற்கு நேபாளத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது. இதில் உடனடியாக உண்ணக்கூடிய வகையிலான மாட்டுக்கறியையும் அனுப்பி உள்ளது. பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் நாடாக அறியப்படும் நேபாளத்தில் மாடுகள் புனிதமாக கருதுப்படுகிறது. பசுவை கொல்வதற்கு தடையும் அங்கு உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான், அந்நாட்டு மக்களுக்கு மாட்டுக்கறியை அனுப்பியுள்ளது அந்நாட்டு மக்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. நேபாளத்திற்கு பாகிஸ்தான் மாட்டுக்கறியை அனுப்பி விஷமச் செயலில் ஈடுபட்டுள்ளதாக பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
