- ஆப்பிள்' ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்கிறார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்.
"ஆப்பிள்' நிறுவனத்தின் அதிநவீன ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் விற்பனை உலகெங்கும் வெள்ளிக்கிழமை தொடங்கியதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
எம்.பி.3 சாதனங்களில் புரட்சியை ஏற்படுத்திய ஐ-பாட், செல்லிடப்பேசியில் தொடுதிரைத் தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகம் செய்த ஐஃபோன், கைக்கணினியான ஐ-பேட் உள்ளிட்ட அதிநவீன வடிவங்களை அளித்த ஆப்பிள் நிறுவனம் புதிய கைக்கடிகாரத்தை அண்மையில் அறிமுகம் செய்தது.
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் இதை அறிமுகம் செய்தார். இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. ஃபிரான்ஸ், ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை தொடங்கியது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு முதல் கைக்கடிகாரங்கள் முதலில் வழங்கப்பட்டன. இந்த கைக்கடிகாரத்தில், தொலைபேசி, ஜிபிஎஸ் வழிகாட்டி, குறுஞ்செய்தி, உடற்பயிற்சி தொடர்பான புள்ளிவிவரங்களை அளிக்கவல்ல அப்ளிகேஷன்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 8ஜிபி நினைவுத் திறன் மூலம் பாடல்கள், படங்கள் சேமித்துப் பயன்படுத்தலாம். இந்த கைக்கடிகாரத்துக்கு என்றே ஆயிரக்கணக்கான புதிய செயலிகள் (அப்ளிகேஷன்) உருவாக்கப்பட்டன.
புதிய வடிவங்களில் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த நிலையில், ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வேறு பல நிறுவனங்கள் ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
26 April 2015 12:18 AM IST