திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு மஹிந்த ராஜபக்ச அமைச்சுப் பதவி வழங்குவதை லஞ்சமாகக் கருத்திற்கொண்டு லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிப்பதாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தேர்தல் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிய 'டீல்' தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என தெரிவித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டவருமான பா.உ ரஜீவ விஜேசிங்க.
பொது எதிரணியில் இணைந்து கொள்வதற்காக ரவுப் ஹக்கீம் தன்னிடம் பெருந்தொகைப் பணம் கோருவதாக ரணில் விக்கிரமசிங்க தன்னிடமே நேரடியாகத் தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ள ரஜீவ விஜேசிங்க, அதேபோன்று ரிசாத் பதியுதீனுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதும் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவே என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து திஸ்ஸவுக்குப் பதவி வழங்கியது லஞ்சம் என்றால் ஜனாதிபதி மைத்ரிபால ரணிலுக்குப் பதவி வழங்கியதும் லஞ்சம் அல்லவா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பியிருந்தமையும் அதற்குப் பதிலளித்த நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, தேர்தல் பிரகடனத்தின் பின் அரசியல் இலாபத்துக்காகப் பதவி வழங்குவது அரசியல் யாப்புக்கமைய சட்ட விரோதமானது என விளக்கமளித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
பொது எதிரணியில் இணைவதற்கு மு.கா தலைவர் 'பேரம்' பேசியது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதமே தகவல் வெளியாகியிருந்த போதும் மக்கள் அலை மைத்ரியின் பக்கம் இருக்கும் போது அதற்காக ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேள்வி கேட்டிருந்த ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறித்த பணப் பேரத்தை நிராகாரித்திருந்தமை தொடர்பாக டிசம்பர் மாத செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் நினைவுகூறத்தக்கது.