ஒவ்வொரு பருவகால மாற்றமும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கோடை காலம். சூரியன் தகிக்கும் இந்தக் காலத்தில் நம் உடலைக் காத்துக்கொள்வது எப்படி? இதோ சில குறிப்புகள்... நம் உடம்பை உஷ்ணத்தின் தாக்கம் பாதிக்காமல் இருக்க உரிய அக்கறை செலுத்த வேண்டும். அவ்வப்போது மோர், எலுமிச்சை ஜூஸ், இளநீர் என்று பருகலாம்.
குறிப்பாக வெளியில் அலையும் வேலை செய்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் இதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் எண்ணைப் பதார்த்தங்கள், காரம் போன்றவற்றைத் தவிர்க்கலாம். பாதுகாப்பான குடிநீரையும் நிறையப் பருகலாம்.
ஒவ்வொரு நாளும் சிலமுறை முகத்தை நன்கு கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படும், தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தைக் கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கலாம்.
வேர்க்குருவைப் போக்க தூய சந்தனத்தைப் பன்னீரில் குழைத்து வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல பலன் நிச்சயம்.
வெயிலின் தாக்கம் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படலாம். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.
கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.
முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
வெயில் காலத்தில் வியர்வை அதிகமாகச் சுரப்பதால் தோல் வறட்சி உண்டாகும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.
நீர்ச்சத்து உணவுப் பொருட்களைச் சாப்பிடு வதன் மூலம், அடிக்கடி தண்ணீர் பருகுவதன் மூலம் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்குப் புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிரை விட வெந்தயம், உப்பு, புதினா, கறிவேப்பிலை இட்ட மோர் பருகுவது நல்லது.
கோடை காலத்தில் பொதுவாக வெயிலில் அலைவதைக் குறைத்துக்கொண்டால், சூரியனின் புறஊதாக் கதிர் பாதிப்பு போன்றவற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்!
