Thursday, 30 April 2015

“லஞ்ச ஊழல் ஆணைக்குழு”பாச்சலுக்கு தயார் நிலையில்

Gota 1

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவானது முறைப்பாடுகள் இன்றி தாமாகவே விசாரணைகளை மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்க, அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், 'ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்து, அமைச்சரவை மூலம் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் முறையை கொண்டுவருவதாக தெரிவித்திருந்தோம். அதனை முடிந்தளவு நிறைவேற்றியுள்ளோம்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தை சட்டமூலமாக கொண்டுவருவதாகவே குறிப்பிட்டோம். ஆனால், அதனை அடிப்படை உரிமையாக கொண்டுவருவதற்கு உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் படி, ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவறாக இருப்பார்.

எனினும், மக்களதும் அமைச்சரவையினதும் அரசாங்கத்தினதும் முப்படைகளினதும் தலைவராக ஜனாதிபதியே இருப்பர்.

ஜனாதிபதி ஆட்சிக்காலம் 5 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், நான்கரை வருடங்களுக்கு பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

அத்துடன், 30 அமைச்சர்களும் பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நியமிக்கப்படுவர். எதிர்வரும் நாடாளுமன்றங்களில் பிரதான இரு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.

மேலும் நாடாளுமன்றின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரே பிரதமராக நியமிக்கப்படுவர். அவர் எந்தக் கட்சியை சார்ந்தவராகவும் இருக்கலாம்.

பிரதமரை பதவி விலக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை. ஆனால் அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால், அரசின் கொள்கைகள் தோல்வியுற்றால், வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அமைச்சரவையும் கலைக்கப்படும்.

அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகித்தவர்களில் இதுவரை நாடாளுமன்றத்திலிருந்து மூன்று பேரும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலிருந்து 7 பேரும் பங்காற்றினார். தற்போது அது மாற்றப்பட்டு நாடாளுமன்றத்திலிருந்து 7 பேரும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலிருந்து 3 பேரும் நியமிக்கப்படுவர்.

அத்துடன், அரச தணிக்கை ஆணைக்குழுவும், தேசிய கொள்முதல் ஆணைக்குழுவும் நிறுவப்படவுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆட்சிக்காலத்தில் இயங்கிவந்த தேசிய கொள்முதல் முகவர் நிலையம், கடந்த ஆட்சிக்காலத்தில் இல்லாமல் செய்யப்பட்டு, கேள்விப்பத்திரம் கோரப்படாமல் பாரிய திட்டங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்து இலகுவாக நிறைவேற்றிக்கொண்டார்கள்.

இந்நிலையில், இந்த ஆணைக்குழு பாரிய திட்டங்கள் தொடர்பில் உரிய ஆலோசனைகளை வழங்குவதாக செயற்படும். இவையே குறித்த திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள்' என குறிப்பிட்டார்.

Loading...