ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து பூமிக்கு மேலே சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. தற்போது அங்கு 6 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து, ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்கள் அடிக்கடி பூமியில் இருந்து விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ரஷியாவின் ஆளில்லா சோயூஸ் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 1940 பவுண்டு எடை கொண்ட எரிபொருள், 110 பவுண்டு ஆக்சிஜன், 926 பவுண்டு தண்ணீர், 3128 பவுண்டு உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் இந்த விண்கலம் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த விண்கலத்தின் பயண நேரத்தை 6 மணி நேரத்துக்கு பதிலாக, 2 நாட்களாக விஞ்ஞானிகள் மாற்றி அமைத்தனர். அதன்படி விண்கலம் இன்று (வியாழக்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய வேண்டும்.
ஆனால் இந்த விண்கலம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பூமியுடனான கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விஞ்ஞானிகள் அதை சரியான பாதையில் செலுத்த கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் விண்கலத்தை தொடர்பு கொள்ள முடியாததால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இந்த விண்கலம் தற்போது எங்கேயும் போக முடியாமல் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது எங்கு, எப்போது வேண்டுமானாலும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் கவலையில் ஆழ்ந்துள்ள அவர்கள், விண்கலத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவர தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளி ஆய்வுப்பணிகளில் ரஷியா, சமீபகாலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்த விண்கலத்தின் செயலிழப்பு ரஷியாவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இந்த பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்தை அடையாவிட்டாலும், அங்கு தங்கியிருக்கும் வீரர்களுக்கு சில மாதங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அங்கே இருப்பதாக நாசா தெரிவித்து உள்ளது.
