
கடல் கடந்த கல்யாணி
கட்டிய கணவனையும்
கட்டியணைத்த குழந்தையையும்
கலாசார மோகத்தால்
களைந்திடுவாள்!
கண் கூசும் ஆடை
கண்றாவியாகிவிட…
கவலைப்பட மாட்டாள்!
கனவு காண்பாள்
கடுகளவேனும்
கணவனையோ, குழந்தையையோ
கண்டிட மாட்டாள்!
கண்ணுக்கு மையிட்டு
’கலர்புல்’ ஆடையணிந்து
கால்குதி உயர்ந்து
கதி மறந்துபோவாள்!
காட்டரபி கூட
கலங்கிடுவான்
கண் கெட்டு நின்று விடுவான்
கண நேரம்…!
களைத்து வியர்த்து உழைத்துக்
கண்ட காசு கரைந்திடும்
கானலாகிவிடும் !
கடிதம் காணாமல்
கதி கலங்கிடும் குடும்பம் !
காலமோ கரைய
களங்கமில்லாத கற்பையும்
கள்வர்களிடம் கரைத்து,
கட்டுநாயக்க விமானத்தளத்தில்
கால்வைத்து விடுகிறாள்!
கண்வைத்த தூரம்
கட்டிய கணவனுமில்லை
கருணைக் குடும்பமுமில்லை!
கண நேரமாகியும் காத்திடுவாள்
காக்கைகூட கவனிக்காது…
கார் பிடித்து,
காரைக்குடிக்குச் செல்வாள்
கட்டிய வீட்டில்
கட்டிய கணவன்
கலக்கலாக வாழ்கின்றான் – பல
கன்னிகளுடன்!
கடி நாகம்
கடித்தது போல
கலங்கிடுவாள்,
கரைந்து போன
கற்போடு !
