
Ana
A
அனார் இஸ்ஸத் ரெஹனா
மலைகளுக்கப்பால்
சூரியனுக்குப் பதிலாக நீ எழுந்து
வளர்கிறாய்
பனிமூடிய முகடுகளை
விலக்கி அமர்ந்திருக்கிறாய்
கடும் பச்சை நிற, சுருண்ட தலைகளுடன்
அடர்ந்திருக்கிறது என் காதல் காடு
காட்டின் அரசனாகப் பிரகடனப்படுத்தி
ஒளிர்வுக்கிரணங்களால் நுனி வேர்வரை ஊடுருவி
தழுவிச் சிலிர்க்க வைத்து ஆட்சி செய்கிறாய்
வளைந்த பாதைகளில் நதியைப் போல இறங்கி உருள்கிறேன்
உன்னிடம் இறக்கைகள் இருக்கின்றன
எல்லா இடுக்குகளிலும்
என்னைக் கவ்விப் பறக்கிறாய்
காடு முழுவதிலும் மேய்கின்றன
நம் கவிதைகள்
உள் நுழைந்தவனின்
பிரகாசமும் பாடலும்
ரகசியப் பூட்டுக்களை திறக்கின்றன
இனி
அரசன் கீறிவிட்ட காயங்கள்
என் காடெங்கும் பூப்பெய்யும்
கமழும் அஸ்தமனம் வரை
----
“எனக்குக் கவிதை முகம்“ - எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பிலிருந்து.............