சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்துகின்றன.
அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு திருகோணமலையில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.
ஸ்ரீறிலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்திலும் ஐக்கிய தேசிய கட்சி கெம்பல் பார்க் மைதானத்திலும் இம்முறை மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை இரண்டாகப் பிரிந்து மே தினக்கூட்டங்களை கொழும்பில் நடத்தவுள்ளது. 11 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதிலிருந்து இம்முறையே இரண்டாகப் பிரிந்து மேதினக் கூட்டங்கள் இந்தக் கட்சியினால் நடத்தப்படவுள்ளன.
அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஒரு பிரிவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து மற்றுமொரு பிரிவும் மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன. அதாவது இன்றைய தினம் கொழும்பிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் 17 பேரணிகளும் கூட்டங்களும் இடம்பெறவுள்ளன.
மேலும் மேதினத்தை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் அமுலுக்கு வரும் வகையில் விஷேட போக்கு வரத்து ஒழுங்குகளையும் பொலிஸ் போக்கு வரத்து பிரிவு முன்னெடுக்கவுள்ளது.
அத்துடன் கொழும்பு நகரின் பாதுகாப்புக்காக 2800 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விஷேட கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து கடமைகளுக்கென பிரத்தியேகமாக 2250 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சி
சிறிலங்கா சுதந்திரக்கட்சி இம்முறை மே தினக்கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு ஹைட்பாக் மைதானத்தில் நடத்தவுள்ளது. கொழும்பில் மூன்று பகுதிகளிலிருந்து ஊர்வலமாக வரவுள்ள சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் இரண்டு மணியளவில் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைவர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் மருதானை காமினி மண்டப சந்தி, விகாரமாஹேதவி பூங்கா, புருக்பொன்ட் சந்தி, ஆகிய இடங்களிலிருந்து ஊர்வலமாக ஹைட்பார்க் மைதானத்திற்கு வரவுள்ளனர். அதன் பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தலைமையில் பிரதான கூட்டம் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால பிரதான மேதின உரையை நிகழ்த்தவுள்ளார். இதன்போது 19 ஆவது திருத்தச் சட்டத்தின் நிறைவேற்றம் தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்த ஆதரவு கூட்டம்
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சியின் பங்காளிக்கட்சிகள் கிருலப்பனையிலுள்ள அத்துலத்முதலி மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மஹிந்தராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், பதிலாக வாழ்த்து செய்தியொன்றை அனுப்பிவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உள்ளிட்ட சில கட்சிகள் மஹிந்த ஆதரவு மேதினக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி
இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக்கூட்டம் பொரளை கெம்பல் பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தொழிற்சங்கமான தேசிய ஊழியர் சங்கம், இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புக்கள் இணைந்து இந்த மே தினக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜே.வி.பி.
மக்கள் விடுதலை முன்னணியின் மேதினம் கூட்டம் கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்தில் இடம் பெறவுள்ளது. தெஹிவளை, .மஹிந்த வித்தியாலயத்திலிருந்து மக்கள் விடுதலையின் முன்னணியின் ஆதரவாளர்கள் பி.ஆர்.சி. மைதானத்திற்கு ஊர்வலமாக வருகை தருவார்கள். பிரதான மேதினக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியி்ன் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் லால்காந்த விஜித்த ஹேரத் எம்.பி. உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
கூட்டமைப்பு
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மே தினக்கூட்டம் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு கிழக்கை உள்ளடக்கியதாக நடைபெறும் பிரதான கூட்டம் இம்முறை திருகோணமலையில் நடைபெறும்.
ஜனநாயகக் கட்சி
மேலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் மேதினக் கூட்டம் நாரஹென்பிட்டி ஷாலிகா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி
மேலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதினக்கூட்டம் அதன் தலைவர் மனோகணேசன் தலைமையில் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் நடைபெறும். இந்தக்கட்சியின் பிரதான கருப்பொருளாக அதிகாரப் பரவலாக்கல் மற்றும் தேசிய ஒற்றுமை என்பன முன்வைக்கப்படும்.
நவ சம சமாஜ கட்சி
நவசமசமாஜக்கட்சியின் மே தினக்கூட்டம் அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ணவின் தலைமையில் கூட்டம் கொழும்பு குணசிங்கபுர பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும். மேலும் மலையக அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.
