கிரிக்கெட்டை நாம் கிராமத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். கிரிக்கெட்டை மட்டுமல்ல, நமது விளையாட்டையே கிராமத்திலிருந்து ஆரம்பித்தால் சிறந்ததொரு பெறுபேற்றை நாம் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் இடைக்கால சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி.
இலங்கைக் கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கிராமத்திலிருந்துதான் சிறந்த வீரர்கள் வருகிறார்கள். ஆனால் நாங்களோ தலைநகரத்தில்தான் விளையாட்டுக்கான அனைத்து வளங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது மாறவேண்டும். நகரத்தைப் போன்றே கிராம மட்டத்திலும் சம்பூரணமான வளங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம்.
இப்படியான செயற்பாடுகளால் நாம் எதிர்கால கிரிக்கெட்டை ஆக்கபூர்வமாக உருவாக்கமுடியும் என்றார்.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நீச்சல் தடாகம் ஒன்றை உடனடியாக அமைக்கவுள்ளதாகவும் சிதத் வெத்தமுனி தெரிவித்தார். கிரிக்கெட் மைதானத்தில் நீச்சல் தடாகம் ஒன்று இருக்கவேண்டியது அவசியம். காரணம் பயிற்சிகளின்போது மேலதிக பயிற்சிகளுக்கு இது அத்தியாவசியம். இதை கூடிய சீக்கிரத்தில் அமைப்பதற்கு நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல் எந்நேரத்திலும் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் உள்ளக பயிற்சி நிலையம் ஒன்றை உருவாக்கவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று சிதத் வெத்தமுனி குறிப்பிட்டார்.
