நேபாளத்தை நிலைகுலைய வைத்த மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகும் நில அதிர்வுகள் தொடர்கின்றன.
அங்கு நேற்று மட்டும் இரண்டு முறை மிகக் கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன. ஆனால் அதனால் பெரிய பாதிப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.9 என்ற அளவுக்கு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்கட்ட வீடுகள் தரைமட்டமாயின.
இம்மாதம் 12ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவுக்கு மிகப் பெரிய நில அதிர்வு ஏற்பட்டது. அதைத் தவிர கடந்த ஒரு மாதத்தில் 265 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலையில் நேற்று இரண்டு முறை கடும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. கோர்கா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நேற்று அதிகாலை 3.23-க்கு ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து டோலாகானை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவுக்கு மற்றொரு நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்கள், கடும் பீதியில் உள்ளனர்.
