Sunday, 31 May 2015

சம்பூர் மக்கள் மீண்டும் விரட்டியடிப்பு.

sampoor 01
அண்மையில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட, காணிகளுக்குள் உரிமையாளர்கள் நுழைவதற்குத் தடைவிதித்துள்ள சிறிலங்கா காவல்துறையினர், அங்கு தற்காலிக குடில்களை அமைத்து தங்கியிருந்தவர்களையும், துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களையும், வெளியேற்றியுள்ளனர்.
சம்பூர் காணிகள் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதைக் காரணம் காட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குள், நடமாடுவோரை வெளியேற்றுமாறு நீதிமன்ற உத்தரவு தமக்கு கிடைத்துள்ளதாக கூறியே, சிறிலங்கா காவல்துறையினர் தம்மை வெளியேற்றியதாக சம்பூர் மக்கள் தெரிவித்தனர்.
சிறிலங்கா காவல்துறையின் இந்த நடவடிக்கையால், ஒரு வாரகாலமாக அந்தப் பகுதிக்குள் தமது காணிகளில் மீளக்குடியேறுவதற்காக, துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்காலிக குடில்களில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இவர்களது குடியிருப்பு காணிகள் உட்பட அந்த பிரதேசத்திலுள்ள சுமார் 1100 ஏக்கர் நிலம் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காகவும், கடற்படை பயிற்சி முகாமுக்கும் சுவீகரிக்கப்பட்டிருந்தது.
இதில், முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கும், சிறப்பு வர்த்தமானி அறிவித்தல், சிறிலங்கா அதிபரால், இம்மாதம் வெளியிடப்பட்டது.
எனினும், குறித்த காணிகள் இதுவரை அதிகாரபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்தினால் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை.
இருந்தபோதிலும் காணிகளின் உரிமையாளர்கள் விரைவாக மீள்குடியேற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன், தமது காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்ததுடன், சிலர் தற்காலிக குடில்களை அமைத்தும் தங்கியிருந்தனர்.
அதேவேளை, முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிறுவனம் இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

sampoor 02

Loading...