மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தலைவர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், நீதித் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இந்த வாரம் கொழும்பு வந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இம்மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் உடனடி விளைவாகவே, இவர்கள் கொழும்பு வந்துள்ளனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களைக் கண்டறியவும், சிறிலங்காவிள் உள்நாட்டு விசாரணைகளுக்கு உதவவும் அமெரிக்கா தயாராக இருப்பதாக, ஜோன் கெரி உறுதியளித்திருந்தார்.
இதற்கமைய, கொழும்பு வந்துள்ள அமெரிக்க அதிகாரிகள் குழு, சிறிலங்காவின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் மூத்த விசாரணையாளர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இதன்போது, தற்போது மேற்கொள்ளப்படும் உயர்மட்ட விசாரணைகள் குறித்து கேட்டறிந்துள்ள அமெரிக்க அதிகாரிகள், வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்க8ளக் கண்டறிய உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
-
