Saturday, 2 May 2015

சீன எல்லைக்குள் நுழைந்த இந்திய போர் விமானம்



நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய போர் விமானம், பாதை மாறி, சீனா எல்லைக்குள் நுழைந்து விட்டது என, நேபாள அரசு தெரிவித்துள்ளது.

நிவாரண பொருட்கள் மற்றும் ராணுவ வீரர்களுடன் வரும் இந்திய போர் விமானங்கள், நேபாள அரசு அதிகாரிகளின் ஒப்புதலின்றி, நேபாள நாட்டின் எல்லையை ஒட்டி உள்ள, சீனாவிற்குள் தவறுதலாக நுழைந்து விடுவதாக, நேபாள ஊடகங்கள் குற்றம்சாட்டின.'இந்தியாவின் இந்த போக்கு, நேபாளம் - சீனா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக உள்ளது; சர்ச்சைக்குரிய இந்தியாவின் செயல், நேபாள அரசுக்கு கவலை அளித்துள்ளது' என்றும், நேபாள ஊடகங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக, நேபாள ராணுவ தளபதி கவுரவ் சும்ஷெர் ராணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:நேபாளத்தின் பூகோள அமைப்பை தவறாக புரிந்து கொண்டதன் விளைவாக, இந்திய போர் விமானம், சீனாவின் எல்லைக்குள் சென்று விட்டது. இது, விரைந்து உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏற்பட்ட தவறு. இக்கட்டான வேளையில், சர்வதேச ராணுவம் உதவிக்கு வரும் போது, அது உள்நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் என, கருதக் கூடாது. இந்த வகையில் தான், இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளின் ராணுவ உதவியை மதிப்பிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Loading...