19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராக இரா.சம்பந்தன்?
அண்மையில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய, உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சபைக்கு10 உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்றன.
இதன் முடிவில், அரசியலமைப்புச் சபைக்கான பெரும்பாலான உறுப்பினர்களின் நிமனம் தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்த வாரம் 10 உறுப்பினர்களின் பெயர்களும் இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் சார்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகள் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்க ஜேவிபி இணங்கியுள்ளது.
அதேவேளை, ஐதேக சார்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் பெயரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜோன் செனிவிரத்னவின் பெயரும், பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, அரசியலமைப்புச் சபையில் நாடாளுமன்ற உறுப்பினர்களல்லாத- வெளியக நிபுணர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்று இடங்களுக்கு, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் மாயாதுன்ன, மற்றும் ஐ.நாவின் முன்னாள் உதவிச் செயலர் ராதிகா குமாரசாமி ஆகிய இருவரின். பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது உறுப்பினர் இன்னமும் பரிந்துரைக்கப்படவில்லை. மூன்றாவது உறுப்பினராக முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் தவிர, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும், அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
அடுத்தவாரம் அரசியலமைப்புச்சபைக்கான உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks Pathivu