அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொன்விழா
17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில்
இலங்கை முஸ்லிம்களின் கல்வி அபிவிருத்தியில் கடந்த ஐந்து தசப்தங்களாக சேவையாற்றி வரும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் 50 வது வருட பொன்விழா நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் உள்ள தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டு தலைவர் பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ள இப்பொன்விழா நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பிரதம அதிதியாகவும், கல்வி இராஜாங்க அமைச்சர் பீ. இராதா கிருஷ்ணன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.
அனர்த்த முகமைத்துவ அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். பௌசி, நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதுர்தின், பெருந்தெருக்கள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அல்ஹாஜ் கபீர் ஹாஷிம், முஸ்லிம் விவகார தபால் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ. ஹலீம், சிறப்பு அதிதிகளாக பங்குபற்றும் இந்நிகழ்வில் கலாநிதி உவைஸ் அஹ்மட் சிறப்புரை நிகழ்த்த உள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தவிசாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலைமையில் மாநாட்டின் சிரேஷ்ட ஸ்தாபக உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட இருப்பதோடு பொன்விழா மலரும் வெளியிடப்படவுள்ளதாக மாநாட்டின் தேசியப் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.
Rasheed M. Imthiyaz
National General Secretary