ரியாத்: ஏமன் தலைநகர் சானா மீது நேற்று சவுதி கூட்டு படை விமானங்கள் குண்டு மழை பெய்தன. இதன் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் 5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தனர். ஏமனில் கடந்த ஒன்றரை மாதமாக உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. அங்குள்ள சன்னி பெரும்பான்மை அரசுக்கும் சிறுபான்மை ஷியா மக்களுக்கும் இடையே ஆயுத போராட்டம் கடந்த மாதம் ெவடித்தது. ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி பழங்குடி மக்கள் அரசுக்கு எதிராக யுத்தம் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஆயுத உதவியையும் நிதி உதவியையும் ஈரான் அரசாங்கம் வழங்கி வருகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி அண்ைட நாடான சவுதி அரேபியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். சவுதி அரேபியா சன்னிபிரிவு மன்னர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை தொடர்ந்து ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையில் கூட்டுபடை விமானங்கள் கடந்த ஒன்றரை மாதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் சவுதி விமான தாக்குதலில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான மக்கள் காயம் அடைந்தனர். அங்கு தங்கி வேலை பார்த்து வந்த வெளிநாட்டினர் சொந்த நாடு திரும்பினர்.
இடையில் ஐ.நா.கோரிக்கையை ஏற்று சில நாட்கள் விமான தாக்குலை சவுதி நிறுத்தியது. ஆனால் இதற்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் குண்டுவீசும் நடவடிக்கை சவுதி தொடங்கியது. நேற்று சானா நகர் மீது பல மணி நேரம் குண்டுகள் வீசப்பட்டது. இதில் கிளர்ச்சியாளர்களின் பல முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக பொதுமக்கள் சானா நகரை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி கூட்டு படையினர் ரேடியோ மூலம் அறிவிப்பு செய்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் வரும் 12ம் தேதி முதல் 5 நாடகள் வான்வழி தாக்குதலை நிறுத்தி கொள்வதாக சவுதி வெளியுறவு அமைச்சர் அடல் அல் ஜுபிர் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
