Saturday, 23 May 2015

கவிதை ஏமாற்றம்

Image result for கடவுள் image

பூமிக்கு வந்த கடவுள்
கணப்பொழுதேனும் தங்கி இளைப்பாற
கடுகளவு இடம் தேடினான்
மனித மனங்களில்.

வயோதிகன் கண்டான்.
பகை பழி குற்றம் கவலை 
முதியவன் மனதை
அப்போதும் நிறைத்திருந்தன
முள்மரங்கள்.
உட்புக முடியாது திகைத்தான் கடவுள்.

வாலிபன் தெரிந்தான்.
காமம் புதிர் குழப்பம் கலகம்
அதீத உணர்ச்சிகள்…
உலகைப் புரட்டும் லட்சியங்கள்…
சதா ஆட்டுவிக்கும் அவன் மனதை.
அங்கும் நுழைய முடியவில்லை கடவுளால்.

உலகை வெல்லும் வித்தை யாவும்
தேர்ந்து பழகும் களமாய் இருந்தது
நடுவயதினன் மனம்.
ஓய்வாய்த் தலைசாய்க்க
அங்கும் இடமில்லை கடவுளுக்கு.
  
செய்-செய்யாதே
பெற்றோரின் 
கத்திமுனைக் கட்டளைகள்
மற்றும்
பள்ளிப்பாட 
அக்கினிப் பரீட்சைகளால் 
இயல்பு கனவு
குழந்தைமை உள்ளுணர்வு
மெல்ல மெல்லச் சிதைவுற
உலர்ந்து கிடந்தான் பிஞ்சுமகன்.
கடைசிப் புகலிடமாய்த்
தேடித் தேர்ந்த சிறுவன் மனதிலும்
இடமற்றுப் போக
வானகம் திரும்பினான் கடவுள் கண்கலங்க.

ஆக்கம்  :முடவன் குட்டி
Loading...