லிபியாவிலிருந்து குடியேறிகளை ஐரோப்பாவுக்கு கொண்டுவருவதற்கு மனிதக்கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் படகுகளை அழிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் இன்றைய (திங்கட்கிழமை) கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் அனைவராலும் ஏற்கப்பட்டு அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் முதல்கட்டமாக மனித கடத்தல்காரர்களின் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் புலனாய்வு மூலம் திரட்டப்படும். அடுத்தகட்டமாக அவர்களின் படகுகள் சர்வதேச கடற்பரப்பில் குறிவைக்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக இத்தகைய இராணுவ நடவடிக்கைகளை லிபிய கடல் எல்லைக்குள்ளும், கடற்கரையோரங்களிலும் கூட மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதற்கான சட்டரீதியிலான அங்கீகாரத்தை அளிக்கவல்ல ஐநா மன்றத்தின் பாதுகாப்புச்சபை தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் அவர்கள் முயல்கிறார்கள்.
இந்த ஆண்டில் மட்டும் வட ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் சுமார் 60,000 பேர் வரை கடல்வழியாக வந்திருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.
Thanks BBC Tamil
