ஃபதுல்லா : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், சதமடித்து அசத்தினார். முரளி விஜயும் அரை சதமடித்தார்.
இந்தியா–வங்கதேச அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஃபதுல்லாவில் இன்று தொடங்கியது. ஹர்பஜன்சிங் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். அவர் கடைசியாக 2013–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடி இருந்தார். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்திய அணி உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடனும், அஸ்வின், ஹர்பஜன் ஆகிய 2 சுழற்பந்து வீரர்களுடனும் களம் இறங்கியது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘டாஸ்’ வென்று, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முரளி விஜயும், ஷிகார் தவானும் தொடக்க வீரர்களாக இறங்கினார்கள். முரளி விஜய் பொறுமையை கடைபிடிக்க, மறுமுனையில் இருந்த ஷிகர் தவான் அதிரடியில் ஈடுபட்டார். முகமது சகீத் வீசிய 7–வது ஓவரில் அவர் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். இதன் காரணமாக 10.5 வது ஓவரில் இந்திய அணி 50 ரன்னை தொட்டது.
தவான் 47 பந்துகளில் 50 ரன்னை எடுத்தார். இதில் 10 பவுண்டரி அடங்கும். 14–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3–வது அரை சதமாகும். 23.3–வது ஓவரில் இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 107 ரன்னை எடுத்து இருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் தவான் 74 ரன்னிலும், முரளிவிஜய் 33 ரன்களும் எடுத்திருந்தனர்.
மழை விட்டதும் தொடர்ந்து விளையாடிய இந்திய வீரர்களில், தவான் 101 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார். முரளி விஜய் 96 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 44வது ஓவரில் 220 ரன்களை கடந்தது.தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 158 பந்துகளில் 150 ரன்களை கடந்தார். அதேவேளையில் முரளி விஜயும் சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய ஆட்ட நேர முடிவில், 56 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 239 ரன்களை எடுத்தது. தவான் 150 ரன்களையும் முரளி விஜய் 89 ரன்களையும் எடுத்திருந்தனர்.