இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல், தற்போது இங்கிலாந்தில் நாட் வெஸ்ட் தொடரிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.
மேற்கிந்திய தீவுகளின் மிரட்டல் வீரர் கிறிஸ் கெய்ல் இங்கிலாந்தில் நடக்கும் நாட் வெஸ்ட் டி20 தொடரில் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார்.
எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 92 ஓட்டங்கள் விளாசினார்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சோமர்செட்- கென்ட் அணிகள் மோதியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற கென்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்க்கு 227 ஓட்டங்களை குவித்தது. இதில் சாம் நார்தியஸ்ட் (114) சதம்,டேனியல் பெல் (51) அரைசதம் அடித்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய சோமர்செட் அணிக்கு தொடக்க வீரரான கெய்ல் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார்.
இந்த போட்டியில் 62 பந்துகளை சந்தித்த கெய்ல் 151 ஓட்டங்கள் (10 பவுண்டரிகள் 15 சிக்சர்கள்) அடித்தார். இது டி20 போட்டிகளில் கெய்லின் 15வது சதம் ஆகும்.
எனினும் கெய்லின் இந்த அதிரடி ஆட்டம் சோமர்செட் அணிக்கு கைகொடுக்கவில்லை. சோமர்செட் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
இதனால் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கென்ட் அணி திரில் வெற்றி பெற்றது.
