Sunday, 7 June 2015

சீனாவில், யாங்ட்ஸே ஆற்றில் பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் பலி 400-ஐ தாண்டியது


பெய்ஜிங்,

சீனாவில் யாங்ட்ஸே ஆற்றில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து நேரிட்ட கோர விபத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. 

சீனாவில் 11 நாள் பயணமாக, ஜியாங்சு மாகாணத்தின் தலைநகரான நான்ஜிங்கில் இருந்து, தென்மேற்கு நகரமான சோங்கிங் நோக்கி கடந்த 28–ந் தேதி மதியம் ‘ஈஸ்டர்ன் ஸ்டார்’ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றது. ஆனால் 1–ந் தேதி இரவு 9.28 மணிக்கு ஆசியாவின் மிக நீளமான யாங்ட்ஸே ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, கடுமையான சூறாவளியில் சிக்கி, நிலை தடுமாறி அந்த கப்பல் கவிழ்ந்தது. அப்போது கப்பலில் மொத்தம் 456 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

விபத்தை தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், கப்பலின் கேப்டன், என்ஜினீயர் உள்பட 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து 3,400 வீரர்கள், 1,700 துணை ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 149 கப்பல்கள், 59 எந்திரங்கள், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவையும் இந்த பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கவிழ்ந்து 5 நாட்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ராட்சத கிரேன்களின் துணை கொண்டு, கவிழ்ந்த கப்பல் நேராக நிமிர்த்தப்பட்டது.
 
இந்த நிலையில் காலை நிலவரப்படி பலியானவர்களின் எண்ணிக்கை 431 ஆக உயர்ந்தது. 14 பேர் மீட்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் 11 பேர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. மாயமான அவர்களை தேடும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் எந்தவொரு ஒளிவுமறைவும் இருக்காது என சீன அரசு உறுதிபட கூறி உள்ளது. சீனாவில் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான கப்பல் விபத்து இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் தொடர்ந்து நடக்கிறது. மீட்கப்பட்ட உடல்கள், பிரேத பரிசோதனைக்காக சீன அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. பிரேத பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்ட உடல்களை பெறுவதற்காக உறவினர்கள், பிணவறை வாயிலில் சவப்பெட்டியுடன் காத்திருப்பது நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Thanks Thinath thanthi
Loading...