Sunday, 7 June 2015

சவுதி முதல் முறையாக ஹவுதி ஏவுகணையை வழிமறித்து வீழ்த்தியது,

துபாய்,
ஏமன், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் முதல் முறையாக ஹவுதி ஏவுகணையை வழிமறித்து சவுதி அரேபியா வீழ்த்தியது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்தது. இதையடுத்து அங்கு அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்ததால் தாக்கு பிடிக்க முடியாமல், அதிபர் மன்சூர் ஹாதி ஓட்டம் பிடித்தார்.
இந்த நிலையில் அவரை மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்காக அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் 26–ந் தேதி முதல் சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து 2 மாதங்களாக கடுமையான யுத்தம் நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனா பகுதியில் பதுக்கி வைத்துள்ள ஆயுத கிடங்குகளை நோக்கி வான் தாக்குதல் நடத்தி வந்தன.
ஏவுகணையை தாக்குதல்
இதனால் கடும் கோபம் கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மற்றும் அதன் கூட்டுபடைகளில் உள்ள நாடுகளின் மீது வான் தாக்குதல் நடத்த இருப்பதாக எச்சரித்து இருந்தனர். எனினும் கூட்டுபடைகள், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வந்தன.
இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை, போரில் முதல் முறையாக சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ‘ஸ்கட்’ ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் தொடுத்தனர். கிளர்ச்சியாளர்கள் ஏவுகணையை சவுதியின் தென் பகுதியான கமீஸ் அல் முஷாய்ட் நகரை நோக்கி வீசினர்.
முறியடிப்பு
இந்த பகுதியில் மிகப்பெரிய விமான தளம் ஒன்று உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சவுதி அரேபியா அந்த ஏவுகணை தாக்குதலை முறியடிக்க ‘பேட்ரியாட்’ ஏவுகணையை அனுப்பியது. சவுதி அரேபியா அனுப்பிய ஏவுகணை, கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை பாதியிலே வழிமறித்து தாக்கி வீழ்த்தியது. இதனால் சவுதி மீதான கிளர்ச்சியாளர்களின் பெரும் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டது.
இந்த தகவல்களை சவுதி அரேபிய கூட்டுப்படைகளின் தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் உறுதிப்படுத்தின. மேலும் அவர்கள் கூறியதாவது:– ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி மற்றும் அரேபிய கூட்டு படைகளில் உள்ள நாடுகளுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில் இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் சம்பவத்தை நடத்த முயற்சி செய்து உள்ளது. இதில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெளிவாகிறது.
அந்த ஆயுதங்களை அழித்து மக்களை காப்பது தங்களின் முக்கிய நோக்கம் ஆகும். சவுதி மிகுந்த எண்ணெய் வளம் மிக்க நாடாகும். எனினும் இந்த பகுதியில் எந்த எண்ணெய் வளங்களும் இல்லை. அதற்கான ஆதாரம் கூட இல்லை. இந்த நிலையில் இந்த பகுதியை நோக்கி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை வீசி உள்ளனர். இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.




Thanks Thinath thanthi
Loading...