முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் இயங்கி வரும் மகேஸ்வரி அறக்கட்டளைக்கு எதிராக இன்று ஊழல் ஒழிப்பு செயலகத்திடம் புகாரொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பருத்தித்துறை பிரதேச சபையின் தலைவர் பூபாலசிங்கம் சஞ்சீவன் இந்த புகாரை சமர்ப்பித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்குள் இந்த மகேஸ்வரி அறக்கட்டளையானது சட்டவிரோதமான முறையில் மண்அள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த மனுவின் முலம் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த மணல் அள்ளும் நடவடிக்கைகளுக்குப் பிரதேச சபையிடமிருந்து உரிய அனுமதிப் பத்திரம் பெறப்படவில்லை என்று பூபாலசிங்கம் சஞ்சீவன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இவ்வாறு அள்ளப்படும் மண் 200 ரூபாய்க்குத்தான் விற்கப்பட வேண்டும் என்ற போதிலும் சட்டத்திற்கு முரணாக 13,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக பூபாலசிங்கம் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இவ்வாறு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்துமாறுகோரியே இந்த புகாரை சமர்ப்பித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஊழல் ஒழிப்புக் குழு அது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருப்பதாக மனுதாரரின் வழக்கறிஞர் எம்.எ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.
