Monday, 8 June 2015

கருகிப் போன எங்கள் இலட்சியங்களுக்காய் !


எங்களுக்காய் குரல் கொடுத்து 
தேவைகளை நிறைவேற்றுவோமென 
தேர்தல்  காலங்களில் 
உரிமைகளை 
புள்ளடியாய்  பெற்றவர்களே ....!
உங்கள் கோஷங்கள் 
செயலிழந்து 
விட்டனவா ?
அல்லது 
பிரஜாவுரிமையற்று 
போய் விட்டதா ?
உங்கள் 
வாக்குறுதிகள் 
தென்றலுக்கு 
சருகாய் (மாறிப் )பறந்து விட்டதா ?
எங்களது 
ஆசைக் கனவுகளை 
எதிர் பார்ப்புக்களை 
மண்ணுக்குள் புதைத்து 
உரம் காணும் 
அரசியல் வாதிகளே 

நாங்கள் 
வியர்வை சிந்தி உழைத்து வாழ்கின்றோம் 
நீங்களோ 
உழைத்து வாழ முடியாமல் 
எங்கள் குருதிகளை 
உறிஞ்சிக் குடித்து மகிழ்கின்றீர்கள் 
நாங்கள் 
வேதனைச் சுமைகளை 
சாதனை மூச்சுக்களாக்குகின்றோம் 
நீங்களோ -அதனை 
உரிஞ்சியெடுத்து (சுவாசித்தெடுத்து)
சோதனையாக்கு கின்றீர்கள் !
திசையறு கருவியற்ற கப்பலாய் 
எங்கள்  வாழ்வு 
பயணம் போகின்றது 
அதற்கு  நீங்கள் தான் 
சுவாசம் கொடுக்கின்றீர்கள் !
கருங்கல்லுக்குளிருக்கும் 
ஈரம்  கூட 
எம்பிக்களின் -தம்பிகளின் 
மனதிலில்லை 
எங்கள் 
இதயக்கினற்றிலிருந்து ஊற்றெடுக்கும் 
இரத்தக் கண்ணீரிலிருந்து தான் 
உங்கள் தாகத்தை 
போக்கிக் கொள்கின்றீர்கள் 
சுட்டு வீழ்த்தும் 
துப்பாக்கி போல் அல்ல 
எங்கள்  இதய இயந்திரம்
எங்களுக்கும் 
எதிர்ப்புக்கள் இருக்கின்றன 
கனவுகளிருக்கின்றன 
செல்வச் செழிப்பில் வாழ்வதற்கல்ல 
பசிக் கொடுமையில் 
மாண்டு போகாமலிருப்பதற்கு !
நிம்மதி இழந்து போகாமலிருப்பதற்கு !!
மண்ணோடு புதைத்து 
விடாதீர்கள் 
வேரோடு பிடுங்கி 
வீடாதீர்கள் 
இந்த பெண்கள் 
 தினம் தினம் சுமக்கும் 
கூடை  சுமைகளின்  தழும்புகள் 
உங்களுக்கெங்கே தெரியப் போகின்றது 
காணப் போகின்றது 
இது வரை காலமும் நாங்கள் 
ஓட்டை லயன்களில் 
வாழ்ந்து வந்த
தொழிலாளிகளாக இருந்தோம் 
இனிமேலும் 
எங்கள்  உழைப்பில் 
பொருளாதரத்தை உயர்த்திப் பார்க்க 
நினைக்காதீர்கள் !
கருகிப் போன 
எங்கள் இலட்சியங்களுக்காய் 
ஒரு முறை 
வந்து -பார்த்துவிட்டு 
ஆறுதல் சொல்லி விட்டுப் போங்கள் 
உங்கள் வருகை 
வானலைகளில் புகழப் படட்டும் 
தொலைக் காட்சிகளில்பேசப் படட்டும்  
உங்கள் குறை நிறைகள் 
மறைந்து  கொள்ளட்டும் !
மாண்டு போகட்டும் 



கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 










Loading...