Thursday, 25 June 2015

கிழக்குப் பிரதேசத்தை ஏற்றுமதி செய்யக் கூடிய பூமியாக மாற்ற முடியும்-தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி

கடல் வளத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாமாயினும் இங்கு மின்பிடித்தலுக்காகவே இவ்வளம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்திலே மனிதனின் உணவுத் தேவையில் கணிசமான பங்கினை கடல் வளமே அளிக்குமென நம்பப்படுகின்றது. இலங்கையின் மீன்பிடித்தொழிலின் விருத்திக்கு அடிப்படையான பௌதிக வாய்ப்புகளை வடக்கு கிழக்கு மாகாணங்களே பெருமளவு கொண்டுள்ளன. 1100 மைல் நீள நெடிய கடற்கரையோரத்தை கொண்ட இலங்கையின் கண்டத்திட்டின் பரப்பளவு 12,000 சதுரமைல்களாகும். இதில் 73 வீத பரப்பளவு வடகிழக்கு மாகாணம் சார்ந்துள்ளது. தென்னிந்தியா வரை பரந்துள்ள வடபகுதி கண்டத்திட்டு மட்டும் நாட்டின் மொத்தக் கண்டத்திட்டுப் பரப்பளவில் 57 வீதத்தைக் கொண்டுள்ளது. வட கண்டத்திட்டில் அமைந்துள்ள பேதுரு கடல்மேடை, முத்துக் கடல்மேடை, உவாட்ஸ் கடல்மேடை, என்பன மீன்வளம் மிக்க பகுதிகளாகும். ஆழமற்ற இக்கடல் மேடைகளில் சூரிய ஒளி அடித்தளம் வரை ஊடுருவிச் செல்ல இயல்வதால் மீனுணவான நுண்ணுயிர்களின் வளர்ச்சி இப்பகுதிகளில் அதிகமாகும். இதுவே மீன்வளம் அதிகளவு காணப்படுவதற்குக் காரணமாய் அமைகின்றது. இப்பிரதேசக் கடற்கரையோரங்கள் குடாக்களையும், கடனீரேரிகளையும், பெருமளவு கொண்டுள்ளதால் மீன்பிடித்துறைமுகங்கள் ஏற்படுத்தவும் வசதியை அளிக்கின்றன. தென்மேற்கு மொன்சூன் வேகமாக வீசும் திசைக்கு ஒதுக்குப்புறமாக இப்பிரதேசம் அமைந்துள்ளதாலும் வடக்கு மொன்சூன் மென்மையாக வீசுவதாலும் வருடம் முழுவதும் இப்பகுதிகளில் மீன்பிடித்தல் இடம்பெறுவதற்குரிய சாதகமான நிலை உண்டு.

இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலின் புராதன முறைகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நவீனமயப்படுத்தப்படின் மீன்பிடித் தொழில் பெருமளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இயந்திர வள்ளங்களின் பாவனையை அதிகரித்தல், மீன்பிடித்தலில் புதிய முறைகளை பயிற்றுவித்தல், புதிய மீன்பிடி உபகரணங்களை மீன்பிடி தொழிலாளர்கள்; இலகுவில் பெற வழிவகை செய்தல், மீன்பிடித் துறைமுகங்களை அதிகரித்தல், மீனைப் பழுதடையாது பாதுகாக்கும் வசதிகளையும் போக்குவரத்து வசதிகளையும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படின் மீன்பிடித் தொழில் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததோர் தொழிலாக அபிவிருத்தியுறுமென்பது திண்ணம். இது தவிர விலங்கு வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள. பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, தோல் பதனிடுதல் போன்ற தொழிற்றுறைகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதிகளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

வடக்கு கிழக்குப் பிரதேசத்திலே கல்வித்திறன், தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட பண்பாட்டில் சிறந்த மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் இப்பிரதேசம் கொண்டுள்ள பொருளாதார வளங்களைத் திட்டமிட்ட முறையில் முறையாகப் பயன்படுத்தினால் விவசாயமும், கைத்தொழிலும் பெருமளவு விருத்தியுறும்.  மக்கள் வடக்கு கிழக்கு  பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டு அயராது உழைப்பார்களேயாயின் வடக்கு கிழக்குப் பிரதேசத்தை சுயநிறைவுப் பொருளாதார வளம் கொண்ட பகுதியாக மாத்திரமன்றி பல்வேறு மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய பூமியாக மாற்ற முடியும்.

எமது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சிக்கு  வடக்கு கிழக்கு பிரதேச மக்கள் அரசியல் ஆட்சியில் பங்கு கொள்ள ஒரு சந்தர்ப்பம் அளிப்பார்களாயின் நாம்  இக் கடல் வள அபிவிருத்தியில் முக்கிய கவனம் எடுப்போம் என்பதை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன 

            தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா
Loading...