Saturday, 27 June 2015

கொய் மீன்'' நல்ல ருசி.


Basheer Ali
ஆக்கம் பஷீர் அலி 

'கொய் மீன்'' நல்ல ருசி. நிறைய முள் இருக்கும். முள் இருப்பதால்த்தான் ரோஜா அழகாக இருப்பதுபோல, நிறைய முள் இருப்பதால்த்தான் கொய்மீன் இவ்வளவு ருசியாக இருக்கிறதோ என்று கவித்துவமாக சிந்திக்கும் ஆற்றல் அப்போது எனக்குள் இருந்திருக்க் கூடும்.
பிள்ளைகளின் தொண்டையில் முள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக கொய்மீனை எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்து பின்னர் பாலாணம் காச்சுவாங்க உம்மும்மா. அப்போது அதன் ருசி இரண்டு மடங்காய் மாறியிருக்கும். பொறித்த அந்த மீனில் ஓரிரண்டு துண்டுகளை வேறாக்கி வைத்து பகிர்ந்து தருவாங்க. அவங்க திண்ண மாட்டாங்க. உம்மும்மாவுக்கு எண்ணெயில் காண்டம்! அதே வேளை, பேரப்பிள்ளைகள் ருசியாகவும் திருப்தியாகவும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்களே தவிர, அவங்க சாப்பாட்டைப் பற்றியே பெரிதாக அளட்டிக் கொள்ள மாட்டாங்க! எல்லாப் பிள்ளைகளுக்கும் தந்துவிட்டு கடைசியில் ''அரிக்கிமலா''வுக்குள் கொஞ்சமாய் சோறு போட்டு திண்பாங்க.
சிலபோது பிளந்து நெருப்பில் காயவைத்த ''விராள் கருவாடு'' தக்காளி சேர்த்து காஞ்சமிளகாய் சுட்டுப்போட்டு பாலாணம் காச்சியிருப்பாங்க. அதன் வாசனை இரண்டாவது தெரு வரை நிற்கும்!
எனக்கு எப்போதும் கருவைச் சோறு விருப்பம் என்பதால் கருவைச்சோற்றை வேறாக்கித் தருவாங்க. விராள் கருவாட்டு பாலாணமும் திராய்க கீரை சுண்டலும் கருவைச்சோரும் அடுத்தநள் சஹர் வரை அடிநாக்கில் நிற்கும். நோன்பு காலத்தில் எருமை மாட்டுத் தயிர் உம்மும்மா வீட்டில் 'பர்ளு ஐன்'! சுண்ணாம்புக்கட்டி போல இறுகி மணக்கும் தூய எருமை மாட்டுத் தயிரை பச்சரிசிச் சோற்றுக்குள் போட்டு... ஆணைக்கோடு வாழைப்பழம் ஒன்றையும் சேர்த்து பிசைந்து... நினைக்கவே நோன்பு வளைகிறது!
சஹர் சாப்பிட்டு முடித்ததும் உம்மும்மா கடைசிவாய் வெற்றியையை மென்று கொப்பளித்துவிட்டு கால்களை நீட்டிப்போட்டு உற்கார்ந்திருப்பாங்க. நாங்கள் அவவைச் சுற்றி உற்கார்ந்து கொள்வோம். ''இன்னவைத்து சவ்மகதின் அன்அதாயி.... ''இந்த வருடத்தின் ரமழான் மாதத்தின் பர்ழான நோன்பை...'' உம்மும்மா நோன்பு நிய்யத்தை சொல்லித் தருவாங்க. கோரசாக நாங்கள் சொல்லுவோம். மூன்று தடவைகள் சொன்னால்தான் நோன்பு பூரணமாகும் என்பது உம்மும்மாவுக்கு சக கிழவிமார் சொல்லிக் கொடுத்த அறிவு.
சற்றே நேரத்தில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரமுள்ள பெரியாற்றுமுனை ஜாஹுவா பள்ளிவாசலில் அதான் சொல்ல ஆரம்பிப்பார் முஅத்தினார். அதனைத் தொடர்ந்து எல்லாப் பள்ளிகளிலும் சுபஹ் அதான் ஒலிக்கும். குறைந்தது 10 நிமிடங்கள் அதான் சத்தத்தால் முழு ஊருமே ஆடி நிற்கும்.
இன்றுகளில் அறை கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் கூறும் அதானே நமக்குக் கேட்பதில்லை. ஆறு கிலோ மீட்டர் தூரமுள்ள பள்ளிவாசல் அதான் கேட்கும் என்றால் இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதை விடுங்கள், எங்கள் வீட்டில் இருந்து முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் பள்ளிவாசல் இருந்தது. சிலபோது மின்சாரம் இல்லாவிட்டால் ஒலிபெருக்கி இன்றியே முஅத்தினார் சொல்லும் அதான் சத்தம், கணீர் என்று வந்து விழும் என்றால் நம்பவா போறீங்க?
அன்றைய காலத்தில் அவ்வளவு அமைதி! சிறிய சத்தமே சுற்றுவட்டாரமெங்கும் கேட்கும். இன்று அந்த அமைதிக்கு என்னவாயிற்று? சத்தத்தால் சூழல் மாசடைந்து போயிற்று!
சுபஹ் தொழப் போகும் வழியில் பாரூக் மாமாவின் கருத்தக்கொழும்பான் மாமரத்துக்குள் 'அணில் கொரயான்' மாம்பழங்கள் சிதரிக் கிடக்கும். அந்த மங்களான வெளிசத்திலும் மஞ்ச மஞ்சேலென சுண்டியிழுக்கும் கருத்தக்கொழும்பானில் இரண்டு மூன்றை பொறுக்கிக் கொள்வேன். ஒவ்வொன்றும் தேங்காய் சைஸில் இருக்கும்.
இப்படித்தான் நோன்பு திறப்பதற்கான சாப்பாட்டுவகை சேர்க்கும் படலம் சுத்த சுபஹோடு ஆரம்பித்துவிடும்.
கொஞ்சம் தாண்டிப் போனால் அப்துல் ரஊபு மாமாவின் சொன்னாங்காட்டு மாமரத்தடியிலும் மாம்பழங்கள் கொட்டிக் கிடக்கும்...
Loading...