Wednesday, 24 June 2015

குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை எதிர்கொண்டுள்ள சவால்கள்

-சாலையூரான்
இந்த உருளை கிழங்கு செய்கை யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் potato farmஅதற்கு  முன்னரும் நீண்ட காலத்தில் யாழ்ப்பாண விவசாயிகளின் பிரதான ஒரு பணப்பயிர் உற்பத்தியாக இருந்து வந்திருக்கிறது.
காலம் சென்ற பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் அதாவது 1970களின் பிற்பகுதியில் புகையிலை, வெங்காயம், மிளகாய் செய்கையோடு இணைந்ததாக அதிக வருமானம் தரும் ஒரு பணப்பயிராக உருளைக்கிழங்கு குறிப்பாக வடக்கில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.
நெருக்கடியான சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கிடைத்த உள்ளீடுகள் மற்றும் எரிபொருள் வளவாய்ப்புக்களை கவனத்திலெடுத்து இந்த உற்பத்தியை நெறிப்படுத்தும் ஒரு நடைமுறை அப்போதைய போர்ச்சூழலில் இருந்தமையாலும்; இதற்கான உரிய சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமையாலும் விவசாயிகளை பாதிக்காத வகையில் இந்த உருளைக்கிழங்கு செய்கையை அப்போது முன்னெடுக்க கூடியதாக இருந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
ஆனால் நிலையான இப்போதைய அமைதிச் சூழலில் பல புதிய நெருக்கடிகளை உருளைக்கிழங்கு செய்கையாளர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
1970முதல் 1980களின் பிற்பகுதிவரை இந்த கிழங்கு செய்கையாளர்கள் தமக்கான  விதை உருளைக்கிழங்குகளை மானிய விலையில் அரசிடமிருந்து பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்பட்டன.
ஆனால் இப்போது இந்த விதை உருளைக்கிழங்கு விநியோகத்தில் பல தனியார் நிறுவனங்கள் மூக்கை நுழைத்துக்கொண்டுள்ளன.
மானிய விலையில் 50கிலோ உருளைக்கிழங்கை அரசாங்கம் 6000ரூபாவுக்கு விநியோகிக்கும் போது இந்த விலையில் தேவையான விதை உருளைக்கிழங்கை விவசாயிகள் பெறமுடியாமல் இருப்பது இங்கே கவனத்துக்குரியது.
தேவையான விதை கிழங்கை பெறவேண்டுமாயின் தனியாரிடமிருந்து இருமடங்குக்கும் அதிகமான விலையில் அதாவது 12ஆயிரம் முதல் 15ஆயிரம் ரூபாவரை கொடுத்தே தமக்கான விதை கிழங்கை விவசாயிகள் இப்போது பெறவேண்டும்.
மறுபக்கத்தில் அறுவடையாகும் உருளைக்கிழங்குக்கு போதிய சந்;தை விலையை பெறமுடியாதிருப்பது அடுத்த பிரச்சினை.
2010ஆம் ஆண்டின் பின்னர் விவசாயிகள் சம்மேளனங்கள் ஊடாக வடக்கின் அரசியல் பிரதிநிதிகளுடனும் மத்தியில் விவசாய அமைச்சின் பிரதிநிதிகளுடனும் சந்தைப்படுத்தும் உருளைக்கிழங்குக்கான குறைந்த பட்ச விலை குறித்த பேச்சுக்கள் பல தடவைகளில் நடாத்தப்பட்டிருக்கின்றன.
இதனை அறுவடை செய்யும் காலங்களில் வெளியே இருந்து உருளைக்கிழங்கை குறைந்த விலையில் இறக்குமதி செய்வதை தவிர்ப்பது பற்றியும் அதற்கு வசதியாக இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரிப்பது பற்றியும் இந்த சந்திப்புக்களில் ஆராயப்பட்டது.
இதுதவிர கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் ஊடாக நியாய விலையில் கிழங்கை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்தும் இந்த சந்திப்புக்களில் பேசப்பட்டிருக்கிறது.
பல தடவைகள் நடாத்திய இந்த பேச்சுக்களில் நியாயவிலை கிடைப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்ட போதும் அது சீராக நடைமுறைக்கு வரவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
அரசுத்தரப்பு ஒப்புதலளித்ததற்கு இணங்க 2013, 2014 காலப்பகுதியில் சதொச நிறுவனம் வடக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்கை கொள்வனவு செய்த போதும் கிழங்குகளை அளவு ரீதியாக தரம்பிரித்து வௌ;வேறு விலைகள் அவற்றுக்கு வழங்கப்பட்டதில் ஒப்புதலளித்த விலை விவசாயிகளுக்கு கிடைக்க முடியாமற் போய் அந்த முயற்சியும் பின்னர் கைவிடப்பட்டமைதான் வரலாறாக இருக்கிறது.
இதுவிடயத்தில் வடக்கில் செயற்பாட்டில் இருக்கும் விவசாயிகளுக்கான கூட்டுறவு அமைப்புக்களும் சம்பந்தப்படும் திணைக்கள அதிகாரிகளும் கூட மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இந்த விவகாரத்தில் போதிய அழுத்தங்களை கொடுத்து  தமது பிரச்சினைகளை அதிகாரிகளு}டாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்த்துக்கொள்வதில் விவசாய அமைப்புக்கள் போதிய விழிப்புணர்வையும் முன்னேற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பது ஒரு வருந்தத்தக்க செய்தியாகும்.
இதுதவிர தொடர்ச்சியான, வரையறையற்ற உரம் கிருமி நாசினி பாவனையால் மண்வளத்தில் ஏற்பட்ட பாதிப்பு இந்த கிழங்கு செய்கையில் புதிய பங்கசு நோய்த்தாக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறது.
இதன் விளைவாக இதுவரை கிடைத்து வந்த கூடுதல் அறுவடையை இந்த நோய்; மட்டுப்படுத்தியிருப்பதாக விவசாயிகள் விசனம் தெரிவித்திருக்கிறார்கள்.
மண்வளத்தை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றுப்பயிர்செய்கையை விவசாயிகள் நீண்டகாலமாக தவிர்த்து வந்தமையும் பக்க விளைவு இல்லாத இயற்கை உரம், கிருமிநாசினி பாவனை கவனத்திற்கொள்ளப்படாமையும் சேர்ந்து நீண்ட காலத்துக்குப்பிறகு இப்புதிய பங்கசு நோயின் பாதிப்பை கிழங்கு செய்கையாளர்கள் இப்போது எதிர்கொண்டிருக்கிறார்கள்.
2010இலிருந்து ஆண்டு தோறும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டில் ஒரு அந்தர்(50கிலோ) உருளைக்கிழங்குக்காக அறுவடையாகும் ஆகக்கூடுதலான கிழங்கின் அளவு பின்வந்த ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்திருப்பது  அவதானிக்கப்பட்டிருக்கிறது.
செய்கை பண்ணப்படும் நிலங்களுக்காக சீரான ஒரு வளமுகாமைத்துவம் இல்லாமற்போய் அதிக விளைச்சலுக்காக கூடுதல் செயற்கை உரப்பாவனை கட்டு மீறிய அளவில் இடம்பெற்று மண்ணின் வளம் பாதிக்கப்பட்டமையும் விளைச்சலின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.
விவசாயி தனது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருக்கும் போது நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கென விவசாய வெளிக்கள உத்தியோகத்தர்கள் அரசினால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் உருளை கிழங்கு செய்கையில் இந்த உத்தியோகத்தர்களின் சேவைகள், ஆலோசனைகளை எமது விவசாயிகள் உரிய காலத்தில் பெறமுடியாதிருப்பது ஒரு வருந்தத்தக்க செய்தியாகும்.
மண்வளத்தை பாதுகாக்கவும் புதிய நோய்த்தாக்கங்களிலிருந்து விடுபடவும் தேவையான ஆலோசனைகள,; வழிகாட்டல்களை இத்துறை சார்ந்த வெளிக்கள உத்தியோகத்தர்கள் உடனுக்குடன் வழங்குவதோடு அறுவடையாகும் கிழங்குக்கு போதிய சந்தைவிலையை பெற்றுக்கொடுப்பதும் அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.
இதனை சம்பந்தப்படும் அதிகாரிகளும் அமைப்புக்களும் உணர்ந்து செயற்படுத்த முன்வராதவரை பயிர்த்தொழிலில் வடக்கு கிழக்கு விவசாயிகளின் மேன்நிலையாக்கம் என்பது எட்டாக்கனியாகவே எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.
தகவல் மூலம்: சி. துரைசிங்கம்
தலைவர்,
அச்சுவேலி மேற்கு விவசாயிகள் சம்மேளனம்.
Loading...