Wednesday, 24 June 2015

வெளித்தரப்பின் நிகழ்ச்சி நிரலில் சிக்கியுள்ள பாராளுமன்றத் தேர்தல்

-கனக சுதர்சன்
அடுத்த பாராளுமன்றத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதைப் பற்றி election 2015யாருக்கும் உறுதியாகத் தெரியாது. அடுத்த செப்ரெம்பரில் புதிய பாராளுமன்றம் கூடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தாலும் அதனை உறுதியாக நம்பக்கூடிய அளவில் நிலைமைகள் இல்லை. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், 20 ஆவது திருத்தச்சட்டத்தை அமூலாக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதைப்பற்றிய பேச்சுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரும் முயற்சிகள் நடக்கின்றன. நம்பிக்கையில்லாப்பிரேரணையை முறியடிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இதைவிட புதிய அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் விலகியுள்ளனர். புதிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் எப்போது முடியும் என்றும் யாருக்கும் தெரியாது. கலவை அரசாட்சியை மக்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவதானம்தான் அடுத்த பாராளுமன்றத் தேர்தலையும் தீர்மானிக்கப்போகிறது. அதாவது, ஒரு கூட்டரசாங்கம் எப்படியான நன்மைகளைத் தரும் என்ற அவதானிப்பு. இலங்கையின் அரசியல் வரலாற்றில் இன்றைய நாட்கள் மிகவும் விசித்திரமானவை. புதிய அரசியல் பரிமாணங்களை எட்ட முடியுமா? முடியாதா என்ற கேள்விகளின் முன்னே மக்களும் அரசியல்வாதிகளும் குந்திக் கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமான ஆளும்கட்சி – எதிர்க்கட்சி என்ற வகையிலான அரசியல் பொருத்தமானதா? அல்லது புதிய பரிமாணங்களைத் தரக்கூடிய எதிரும் புதிருமான கட்சிகளின் இணைவிலான கூட்டரசாங்கம் பொருத்தமானதா? என்ற கேள்விகளை ஒவ்வொருவருக்கு முன்னும் வரலாறு விட்டுள்ளது.
ஆனால், இந்த நிகழ்ச்சிப் போக்கை அப்படியே தன்னியல்பில் வளர விடுவதற்கு பிராந்திய – சர்வதேச சக்திகள் ஒருபோதும் இடமளிக்காது. இலங்கையில் கடந்த ஜனவரி 08 ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த சக்திகள் - அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்குத் தூண்டலாகவும் துணையாகவும் நின்ற சக்திகள்தான் அடுத்த பாராளுமன்றத் தேர்தலையும் தீர்மானிக்கப்போகின்றன.
தற்போதைய நிலவரத்தின் படி பாராளுமன்றத் தேர்தலை நடத்தினால் அதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவருக்கு ஆதரவான அணியும் பங்கு பற்றவும் வெற்றியடையவும் கூடிய வாய்ப்புகள் உண்டு என்ற நிலை உண்டு. இதை மறுத்துக் கூறினாலும் இதற்கான சாத்தியங்களைப் பற்றி யாரும் சிந்திக்காமல் இருக்க முடியாது.
இதைப்பற்;றிய அவதானத்தையே பிராந்திய சக்தியாகிய இந்தியாவும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகும் கொண்டிருக்கின்றன. மகிந்தவுக்கு ஆதரவான அலை எப்பொழுது சரிவடைகிறதோ அப்பொழுது பாராளுமன்றத் தேர்தலை நடத்தி விடலாம் என்பதே இந்தத் தரப்பின் விருப்பமும் கணிப்புமாகும்.
அப்படியல்லாமல் இப்பொழுது அவசரப்பட்டு  பாராளுமன்றத் தேர்தலை நடத்தினால், அதில் முன்னாள் ஜனாதிபதி எதிர்காலப் பிரதமராக வந்து விட்டால் ஏற்;படுத்தப்பட்ட ஆட்சி மாற்றமும் அதற்காக எடுத்த பகீரத முயற்சிகளும் வீணாகி விடும் என்று இந்த அணி நாடுகள் சிந்திக்கின்றன. இந்தக் கவலை இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்காகப் பாடுபட்ட அரசியல் தரப்பினர்களிடையேயும் உண்டு. ஆகவேதான் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது எப்போது என்பதில் தடுமாற்றங்களும் தாமதங்களும் நிகழ்கின்றன.
100 வேலைத்திட்டத்தின்படி பார்த்தால் இப்பொழுது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது, தேர்தலுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்தலை எப்பொழுது நடத்துவது? அதற்கான கள நிலை என்னமாதிரியாக உள்ளது என்பதைப்பற்றிய அறிக்கையை பின்னணிச் சக்திகள் வழங்கும்வரை காத்திருக்க வேண்டியது இன்றைய இலங்கையின் யதார்த்தமாகியுள்ளது. ஏனென்றால் இலங்கை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிற சக்திகளின் செல்வாக்கு மண்டலத்துள் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
முன்னர் அந்நிய சக்திகள் நேரடியாகவே இலங்கையை ஆட்சி செய்தன. இப்பொழுது அவை நிழல் நிர்வாகம் செய்கின்றன. பிராந்திய – சர்வதேச ஆதிக்கப்போட்டியில் சிக்கித்தவிக்கும் ஒரு சின்னஞ்சிறிய நாடாக நமது நாடு மாறியுள்ளது. இதனால் இந்தச் சின்னஞ்சிறிய நாட்டின் துயரம் மிகப்பெரியதாக மாறியுள்ளது.
இலங்கையின் துயரம் அல்லது தொடரும் அவலம் என்பது பிரித்தாளும் தந்திரோபாயத்துக்குப் பலியாகியதன் விளைவாக ஏற்பட்டது. உள்ளுரில் இணக்கப்பாட்டை எட்ட முடியாமல் இருக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் பிற சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலகுவாகச் சிக்கிக் கொள்கின்றன.  ஆனால், இதையிட்டு அவை சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்திக்க வைப்பதில் புத்திஜீவிகளும் சரி, அரசியற் தலைவர்களும் சரி, கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி முறையாகச் செயற்படுவதில்லை.
ஆட்சியில் இருக்கும் தரப்புகள் தமக்கிசைவான வெளித்தரப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக தமது காலத்தை ஆட்சி செய்கின்றன. அதற்கப்பால் அவை நீண்ட தூர நோக்கில் சிந்திப்பதில்லை. இதுதான் இலங்கையின் கடந்த கால அரசியல் வரலாறாகியது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தால் சீன, இந்திய சாய்வில் இருக்கும். யு.என்.பி ஆட்சியிலிருந்தால் மேற்குலகுக்கான சாய்வைக் கொண்டிருக்கும்.
இப்படி இருந்ததன் விளைவாக நாடு மேலும் மேலும் பலவீனப்பட்டே வந்திருக்கிறது. இப்பொழுது ஒரு பொதுத்தேர்தலை நடத்துவதற்கே வெளிச்சக்திகளின் ஆலோசனையும் அபிப்பிராயமும் நிகழ்ச்சி நிரலும் தேவை என்ற அளவுக்கு நிலைமை வந்துள்ளது.
இப்பொழுது நாட்டின் தலைவர்களுக்கும் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நாட்டிலுள்ள மக்களும் ஒன்றும் புரியவில்லை. இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றியும் ஒருவருக்கும் சரியாகத் தெரியாது. அப்படியான ஒரு நிலையில் வந்து எல்லோரும் நிற்கிறோம்.

இது இன்றைய பிரச்சினையல்ல. இதுவரையான தவறுகளின் விளைவு. இந்தத்  தவற்றை இப்பொழுதே நாம் சீர் செய்வது அவசியம். இல்லையென்றால் எதிர்காலத்தில் இதையும் விட மோசமான ஒரு யுகத்தில் - ஒரு மோசமான காலட்டத்தில், ஒரு மோசமான யதார்த்தத்தில் சிக்க வேண்டி வரும்.

மக்கள் இனரீதியாகச் சிந்திக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவைப்பெற வேண்டுமானால் நாமும் இனரீதியாகச் சிநதிக்க வேண்டும். இனவாதத்தைத் }ண்ட வேண்டும். அதுவே எமக்கான வாக்குவங்கியைப் பேணும் என்றமாதிரி அரசியற் கட்சிகளும் அரசியற் தலைவர்களும் சிந்தித்தால் அதன் விளைவை இந்த நாடே அனுபவிக்க வேண்டியிருக்கும். இப்படியான சிந்தனை முறையின் விளைவாக கடந்த காலத்தில் சிந்திப்பட்ட இரத்தம் இன்னும் சரியாகக் காயவில்லை. அதற்குள் மீண்டும் குருதிப் பெருக்கெடுக்கும் நிகழ்ச்சிகளா?
 
Loading...