உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரானது அண்மைக்காலமாக உள்ளூர்வாசிகளின் அலட்சியம் மற்றும் இயற்கை வானிலை காரணமாக 30 சதவீத அளவுக்கு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர் எவ்வித இடைவெளியும் இன்றி ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளமுடையது. சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் கோபி பாலைவனம் வரை நீண்ட நெடிய தூரம் கொண்டது.
கி.மு. 3-ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவரின் கட்டுமான பணிகளில் சுமார் 6,300 கிலோ மீட்டர்கள் 1368-1644-க்கு இடைப்பட்ட மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது. இதில், 1,962 கிலோ மீட்டர்கள் நீள சுவரானது பல வருடங்கள் ஆகிவிட்டதாலும், காற்று, மழை போன்ற இயற்கை வானிலை காரணத்தாலும், வலுவிழந்து சிதைந்துவிட்டது. 2014-ல் எடுக்கப்பட்ட சர்வேயில் இது தெரியவந்தது.
இந்நிலையில், அங்குள்ள உள்ளூர்வாசிகள் சீனப்பெருஞ்சுவரில் உள்ள செங்கற்களை வீடு கட்டுவதற்காக உருவி திருடிச் சென்று விடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் அலட்சியமாக சீனப்பெருஞ்சுவருக்கு சேதத்தை உண்டு பண்ணுகிறார்கள என புகார் எழுந்துள்ளது. மேலும் அங்குள்ள லூலாங் மாகாணத்தில் உள்ள ஏழை கிராமவாசிகள் கடினமான, கருநிற சீனப்பெருஞ்சுவர் செங்கற்களை திருடி ஒரு செங்கல்லை 30 யுவானுக்கு உள்ளூரில் விற்றுவிடுகின்றனர். இதையடுத்து, செங்கற்களை திருடுவோர் மீது 5 ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கலாச்சார, கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றி வரும் சீனப்பெருஞ்சுவருக்கு வந்திருக்கும் இந்த சோதனை சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
