மியன்மாரில் இருக்கும் கொகாங்க் பிராந்திய கிளர்ச்சியாளர்கள், தமது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும்கூட தம் மீதான தாக்குதல் தொடர்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இந்த தாக்குதல்கள் உண்மையானால், இவர்களின் போர்நிறுத்த அறிவிப்பை பர்மிய இராணுவம் நிராகரித்துவிட்டதை இவை குறிப்புணர்த்துவதாக பார்க்கப்படுகிறது.
இனரீதியில் சீனர்களான இந்த கிளர்ச்சியாளர்களுக்கும் பர்மிய இராணுவத்துக்கும் இடையிலான நான்குமாத கால மோதல்கள், அவ்வப்போது சீன எல்லையைக் கடந்தும் சென்றதால் சீன அரசு கோபமடைந்தது.
மியன்மாரின் எதிர்க்கட்சியின் தலைவி ஆங் சாங் சூச்சி தற்போது சீன ஆளும்கட்சியின் விருந்தினராக சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மியன்மார் அரசுக்கும் பல்வேறு கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையில் தேசியஅளவிலான போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான சூழலை இந்த மோதல் சீர்குலைத்துவிடக்கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
