Saturday, 13 June 2015

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தாக்குதலில் 25 காவல்துறையினர் பலி

ஆப்கானிஸ்தானின் தென் மேற்கே ஹெம்லாண்ட் பகுதியில் தாலிபான்கள் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்களில் இருபதுக்கும் அதிகமான காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மைக் காலத்தில் தாலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன
தொலைதூரப் பகுதியிலுள்ள பாலைவன மாவட்டமான மூசா காலாவில், பல காவல் நிலைகளை தீவிரவாதிகள் தாக்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் சனிக்கிழமை(இன்று)வரை நடைபெற்றன என்றும், தாலிபான்கள் தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன எனவும் அந்த அதிகாரி கூறுகிறார்.
தாங்கள் நடத்திய தாக்குதலில் 25 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், ஏராளமான ஆயுதங்களும், தடவாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தாலிபான்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முற்பகுதியில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை அரசு முன்னெடுத்ததை அடுத்து, ஹெம்லாண்டின் வட பகுதியில் மோதல்கள் மோசமடைந்துள்ளன என்று பிபிசியின் ஆப்கானிஸ்தான் செய்தியாளர் கூறுகிறார்.
கடந்த ஏப்ரலில் இதேபோன்று தாலிபான் நடத்தியத் தாக்குதலிலும் இதே அளவில் தீவிரவாதிகளும், காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
Loading...