மத்திய தரைக்கடலை படகு மூலம் கடக்க முயலும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் பிரச்சனை தொடர்பான திட்டங்களை விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் லக்ஸம்பர்கில் சந்திக்கின்றனர்.
ஐரோப்பாவிற்குள் நுழையும் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு இடையில் சமமாக பிரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொள்ளாவிட்டால், இந்த பிரச்சனையை கையாள இத்தாலிய அரசு வேறொரு திட்டத்தை வகுக்கும் என இத்தாலியின் ஐரோப்பிய விவகாரத் துறை அமைச்சர் சண்ட்ரோ கோஸ்ஸி பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்த புதிய திட்டத்தின் கீழ், தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு இத்தாலியை தாண்டி பயணிக்க தற்காலிக விசாக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சக் கோரிக்கையாளர்கள் செல்ல விரும்பாத நாடுகளுக்கு செல்வதற்கு அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என சில மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
